தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பாஜக நிர்வாகிகள் கடந்த 7ம் தேதி எடப்பாடி படத்திற்கு தீ வைத்து எரித்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜக இளைஞர் அணி தலைவர் தினேஷ் ரோடியை 6 மாத காலம் கட்சியில் இருந்து இடை நீக்கம் செய்வதாக தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜக தலைவர் வெங்கடேசன் நேற்று இரவு அறிவித்தார். இது தொடர்பாக அறிக்கை வெளியானது.
நேற்று இரவு பாஜகவில் இருந்து இடைநீக்கப்பட்ட தினேஷ் ரோடி இன்று காலை மீண்டும் பாஜகவில் சேர்க்கப்பட்டுள்ளார். பாஜகவில் இருந்து தினேஷ் ரோடியை கட்சியில் இருந்து தற்காலிகமாக விடுவித்த அறிவிப்பு செல்லாது என்று பாஜக மாநில பொதுச்செயலாளர் பாலகணபதி இன்று அறிக்கை விட்டுள்ளார்.
எடப்பாடி படத்தை எரித்தவரை மீண்டும் கட்சியில் சேர்த்ததால், அதிமுகவினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:பாஜகவின் இந்த செயல் எரியும் தீயில் எண்ணெயை ஊற்றுவது போன்றது. பழனிசாமியின் படத்தை எரித்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த வாரம் பேட்டி அளித்த ஜெயக்குமார், பாஜகவுக்கும், அதிமுகவுக்கும் மோதல் இல்லை என்றார். ஆனால் இப்போது எரியில் தீயில் எண்ணெயை ஊற்றாதீர்கள் என்று கூறி உள்ளார். எனவே பாஜக , அதிமுக இடையே மோதல் இருந்து கொண்டே தான் இருக்கிறது என்பது தெரியவந்துள்ளது.