திருச்சி மாவட்டம் சிறுகனூர் காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிபவர் குணசேகரன். இவர் பணிக்கு செல்வதற்காக காலையில் 11 மணி அளவில் சீருடையில் ஸ்கூட்டியில் சென்றார். திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை கல்பாளையம் என்ற இடத்தில் வந்தபோது திடீரென குணசேகரன் டூவீலரில் இருந்து தவறி விழுந்தார். அதிர்ஷ்டவசமாக அவருக்கு எதுவும் நேரிடவில்லை. அவர் ரோட்டின் ஓரம், சர்வீஸ் ரோடு பகுதியில் விழுந்ததால் சிறு சிறு சிராய்ப்பு காயங்களுடன் தப்பினார்.
அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள், போலீஸ்காரர் கடமையாற்ற சென்றபோது விபத்தா, என ஓடோடி வந்து உதவினர். தரையில் கிடந்த குணசேகரனை தூக்கி நிறுத்தினர். அவரால் நிற்கமுடியவில்லை. நாணலாக வளைந்தார். அப்போது தான் பொதுமக்களுக்கு தெரிந்தது குணசேகரன் கீழே விழுந்ததற்கு காரணம் மது போதை என்பது.
டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன்னரே காலையிலேயே இவ்வளவு போதையுடன் சீருடையில் வருகிறாரே என மக்கள் அதிர்ச்சியடைந்தனர். சிலர் இதை செல்போன்களில் வீடியோவில் பதிவு செய்தனர். இதை கவனித்த குணசேகரன், கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டி அவர்களை மிரட்டினார். பின்னர் அவர் அங்கிருந்து சென்று விட்டார்.