சிவகார்த்திகேயனின் நடிப்பில் உருவாகும் ‘மாவீரன்’ படத்திற்கு தமிழ் சினிமாவில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்து வருகிறார். இவர்களுடன் முன்னணி நடிகை சரிதா, இயக்குனர் மிஷ்கின், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு பரத் ஷங்கர் இசையமைத்து வருகிறார். ‘மண்டேலா’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் மடோன் அஸ்வின் இப்படத்தை இயக்கி வருகிறார். சமீபத்தில் இயக்குனர் அஸ்வினுடன் சிவகார்த்திகேயனுக்கு மனக்கசப்பு ஏற்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்தது. இதையடுத்து பிரச்சனைகள் சரி செய்யப்பட்டு படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் 21-ஆம் தேதியுடன் நிறைவுபெற உள்ளது. இதையொட்டி இப்படத்தின் இறுதிக்கட்ட க்ளைமேக்ஸ் காட்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. படப்பிடிப்பு நிறைவுபெற்றவுடன் உடனடியாக தயாரிப்பு பணிகள் தொடங்கவுள்ளது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட உள்ள இந்த படம் வரும் பக்ரீத் பண்டிகையையொட்டி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவியும், ஓடிடி உரிமையை அமேசான் நிறுவனமும், ஆடியோ உரிமையை சரிகம பதநிசாவும் கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.