திருச்சியில் இன்று காலை அமைச்சர் நேரு ராஜா காலனியில் உள்விளையாட்டு அரங்கம் திறப்பு விழாவுக்கு சென்றபோது திடீரென திருச்சி சிவா எம்.பியின் ஆதரவாளர்கள் அமைச்சர் காரை மறித்து கருப்புகொடி காட்டினர்.
இதனால் அமைச்சர் நேருவின் ஆதரவாளர் அதிர்ச்சி அடைந்தனர். திமுக கட்சிக்காரர்களே இப்படி செய்ததால் கொந்தளித்த நேருவின் ஆதரவாளர்கள் திடீரென சிவா எம்.பி வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த கார், பைக், நாற்காலிகளை அடித்து உடைத்தனர்.
அமைச்சருக்கு கருப்புகொடி காட்டிய நபர்கள் சிலரை கோர்ட் போலீசார் பிடித்து சென்றனர். அவர்கள் போலீஸ் நிலையத்தில் இருப்பதை அறிந்து அங்கு சென்ற திமுகவினர் சிலர் அவர்களை தாக்கினர்.
இந்த சம்பவங்கள் தொடர்பாக போலீசார் 30பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். நேருவின் ஆதரவாளர் மூவேந்தன் கொடுத்த புகாரில் சிவா ஆதரவாளர்கள் 15 பேர் மீதும், சிவா ஆதரவாளர் சூர்யகுமார் கொடுத்த புகாரின்பேரில் 15 பேர் மீதும் கோர்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.