நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு நேற்று முன் தினம் தொடங்கியது. அவை தொடங்கியவுடன் இந்திய ஜனநாயகம் குறித்த லண்டனில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசிய உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் பாஜக, காங்கிரஸ் உறுப்பினர்கள் மோதலில் ஈடுபட்டதால் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.
இதனை தொடர்ந்து நேற்று அவை கூடிய நிலையில் மீண்டும் பாஜக, காங்கிரஸ் உறுப்பினர்கள் இடையேயான மோதலால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அதானி விவகாரத்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எழுப்பிய நிலையில், ராகுல்காந்தி பேச்சு குறித்து பாஜக கோஷம் எழுப்பியது. இதனால் நேற்றும் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.
இந்நிலையில், கூட்டத்தொடரின் 3-வது நாளான இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தொடங்கியது. அப்போது, அதானி விவகாரம் உள்பட பல்வேறு விவகாரங்களை எழுப்பிய காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அவையில் அமளியில் ஈடுபட்டனர். அதேவேளை, ராகுல்காந்தியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து ஆளும் பாஜக அமளியில் ஈடுபட்டது. இதனால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 3வது நாளாக நாடாளுமன்றத்தில் அமளி ஏற்பட்டுள்ளதால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு வருகிறது.