ஐம்பதிலும் ஆசை வரும்
ஆசையுடன் பாசம் வரும்
இதில் அந்தரங்கம் கிடையாதம்மா
நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா….. இது 1980ல் வெளிவந்த ரிஷிமூலம் படத்தில் இடம்பெற்ற பாடல் வரிகள்.
உடலுக்கு தான் வயது. இதனால் தான் ஆண்டுதோறும் உடல்நிலை மாறுபடுகிறது. குறைகிறது. ஆனால் இளமையில் கொண்ட ஆசை சாகும்வரை அதே உணர்வுடன் இருக்கும். எனவே தான் ஐம்பதில் மட்டுமல்ல, 100லும் காதல் வரும். இதைத்தான் காதலிக்க நேரமில்லை என்ற படத்தில் வரும் பாடல் வரிகள், நோயில்லா உடல் இருந்தால் நூறுவரை காதல் வரும் என்று சொல்லியது.
இந்த பாடல் வரிகளை கவிஞர்கள் தங்கள் கற்பனை திறனில் எழுதினார்கள். ஆனால் கேரளாவில் ஒரு ஜோடி அதை மெய்ப்பித்துள்ளது. கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு பள்ளி பருவ நண்பர்கள் மீண்டும் சந்திக்கும் “ரி யூனியன்” நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழில் மிகவும் பிரபலமான 96 திரைப்பட பாணியில் இந்த சந்திப்பு நடைபெற்றது. 35 ஆண்டுகளுக்குப் பிறகு தங்கள் பழைய நண்பர்களை பார்க்க போகிறோம் என்ற ஆர்வத்தில் பலரும் மகிழ்ச்சியுடன் இளமை தோற்றத்தில் தங்களை அலங்கரித்துக்கொண்டு வந்திருந்தனர்.
அனைவரும் 50 வயதை தாண்டிவிட்ட போதிலும் பள்ளி பருவ நண்பர்களை பார்த்த மகிழ்ச்சியில் இளம் வயதினரை போல மிகவும் உற்சாகமாக, பழைய காதல் நினைவுகளை ரிவைண்ட் செய்துகொண்டு காணப்பட்டனர். நண்பர்களுடன் தங்கள் பள்ளி பருவத்தில் ஆசிரியரிடம் அடி வாங்கியது… என பழைய நினைவுகளை மிகவும் சுவாராசியமாக அசை போட்டுமகிழ்ந்தனர். இந்த ரீ யூனியன் சந்திப்பில் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த ஒரு முன்னாள் மாணவரும் இடுக்கியை சேர்ந்த ஒரு முன்னாள் மாணவியும் பங்கேற்றனர்.
இவர்கள் இருவரும் பள்ளி பருவ காலத்தில் காதலித்ததாக கூறப்படுகிறது. படிப்பு முடிந்த பிறகு அவர்கள் இருவரும் பெற்றோர் விருப்பப் படி வேறு வேறு நபர்களை திருமணம் செய்துகொண்டு பிரிந்து விட்டனர். இருவரும் அவரவர் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்.
இந்த நிலையில் தான், பள்ளிகால நண்பர்கள் சேர்ந்து ரீ யூனியன் மீட் என்ற பெயரில் பள்ளி பருவ நண்பர்கள் சந்தித்துக் கொள்ளும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து இருந்து இருக்கின்றனர். இதில் மேற்கூறிய முன்னாள் காதல் ஜோடிகள் இருவரும் கலந்து கொண்டு இருந்தனர். 35 ஆண்டுகள் கழித்து இருவரும் சந்தித்து இருக்கின்றனர். இந்த சந்திப்பில் பழைய காதல் மீண்டும் துளிர் விட்டதாக கூறப்படுகிறது. நிகழ்ச்சி முடிந்ததும் முன்னாள் காதலர்கள் இருவரும் தலைமறைவானார்கள். ரீ யூனியன் நிகழ்ச்சிக்கு சென்று விட்டு இன்னும் வீடு திரும்பவில்லையே என்று இரு வீட்டினரும் தேடினர்.
வெகு நேரம் ஆகியும் திரும்பாததால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். கணவரைக் காணவில்லை என்று மனைவியும், மனைவியை காணவில்லை என்று கணவரும் புகார் தொடுத்து இருக்கிறார்கள்.இத்தனைக்கும் ஓடிப்போன இந்த காதல் ஜோடி இருவருக்குமே பிள்ளைகள் இருக்கிறார்கள்.
முதல் காதல்…. முதல் முத்தம் ஆகியவை எப்போதும் சிரஞ்சீவியானது. எனவே அவர்கள் முழுமை பெறாத முதல் காதலை பூர்த்தி செய்ய எங்கோ போய் இருக்கலாம். இவர்களால் பெரிய பாதிப்பு இருக்காது. சில நாட்களில் திரும்பி வந்து விடுவார்கள் என போலீசார் இருவீட்டாருக்கும் ஆறுதல் கூறி அனுப்பி வைத்தனர்.