நெல்லை மாநகராட்சி மேயராக இருப்பவர் திமுகவை சேர்ந்த சரவணன். இந்த மாநகராட்சியில் மொத்த கவுன்சிலர்கள் 55 பேர். இதில் 50 பேர் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள். இவர்களில் 35 திமுக கவுன்சிலர்கள் மேயர் மீது பல்வேறு புகார்களை தெரிவித்து வந்தனர். மேயர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி நகர்ப்புற உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.என். நேருவை சந்திக்க கவுன்சிலர்கள் 35 பேர் திருச்சி வந்து உள்ளனர்.
அவர்கள் இன்று திருச்சியில் அமைச்சரை சந்திக்க உள்ள நிலையில் அமைச்சர் நேருவிடம் இது தொடர்பாக கேட்கப்பட்டது. அதற்கு அமைச்சர் நேரு அளித்த பதில் வருமாறு:
நெல்லை மேயர் சரவணனுக்கு(திமுக) எதிராக திமுக கவுன்சிலர்கள் 35 பேர் புகார் தெரிவித்து உள்ளனர். பணிகள் நடக்கவில்லை. மாநகராட்சியில் முறைகேடு நடக்கிறது என கூறி உள்ளனர். ஆங்காங்கே சிறு சிறு பிரச்னைகள் இருக்கத்தான் செய்கிறது. அவற்றை பேசி முடிவுக்கு கொண்டு வருவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.