தஞ்சை மாவட்டம் திருவையாறு திருமஞ்சனவீதி முத்துநாயக்கன் தெருவை சேர்ந்தவர் சண்முகவேல். இவருடைய மகன்கள் ராஜதுரை, கணேசமூர்த்தி (23). இருவரும் கறிக்கடையில் வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில் ராஜதுரை தனது தாயிடம், அடிக்கடி தகராறு செய்ததுடன் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார். சம்பவத்தன்றும் குடிபோதையில் தாயிடம் தகராறு செய்து அவரை தாக்கி உள்ளார். தாயை தாக்கியது குறித்து கணேசமூர்த்தி அம்மாவிடம் ஏன் அடிக்கடி தகராறு செய்கிறாய்? என ராஜதுரையிடம் கேட்டுள்ளார். இதில் ஏற்பட்ட தகராறால் ஆத்திரம் அடைந்த கணேசமூர்த்தி, தனது அண்ணன் ராஜதுரையை நண்பர்கள் உதவியுடன் கடந்த 4-2-2018 கழுத்தை அறுத்து கொலை செய்தார். இந்த சம்பவம் தொடர்பாக திருவையாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேசமூர்த்தி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த திருவாரூர் கொடிமரசந்து நேதாஜி சாலையை சேர்ந்த கணேசன் மகன் தம்பிதுரை (24), திருவையாறு அருகே திருப்பூந்துருத்தி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் மணிகண்டன் (27) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு தஞ்சை மாவட்ட 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது வழக்கை நீதிபதி மலர்விழி விசாரித்து, கணேமூர்த்தி, தம்பிதுரை, மணிகண்டன் ஆகிய 3 பேருக்கும் ஆயுதண்டனை விதித்து உத்ரவிட்டார். மேலும் 3 பேருக்கும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தும், அபராதம் கட்ட தவறினால் மேலும் 1 ஆண்டு சிறை தண்டனை விதித்தும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் துரை.தியாகராஜன் ஆஜரானார்.