இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதிஸ்டாலின் பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குன்னத்தில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் மகளிர் சுய உதவிக்குழுவினரின் விற்பனை பொருட்களுக்கான அரங்குகளுடன் கூடிய புதிய பேருந்து நிறுத்தத்தினையும், குன்னம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மாணவ மாணவிகள் போட்டித்தேர்வுகளுக்கு தயார்படுத்திக்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ள நூலகத்தினையும் இன்று (14.03.2023) தொடங்கி வைத்தார்கள்.
இந்நிகழ்ச்சியில், போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ், மாவட்ட கலெக்டர் க.கற்பகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர்
தொல்.திருமாவளவன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் , மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் .ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
மேலும், குன்னம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தில், போக்குவரத்துத்துறை அமைச்சரின் சொந்த நிதியில் இருந்து, மாணவ மாணவிகளுக்கு போட்டித்தேர்வுகளுக்கு பயன்படும் வகையில் குளிரூட்டி வசதிகயுடன் கட்டப்பட்டுள்ள ”முத்தமிழ் அறிஞர் கலைஞர் போட்டித்தேர்வு நுாலகம் மற்றும் படிப்பகத்தினை” இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திறந்துவைத்து அங்கிருந்த மாணவிகளுடன் கலந்துரையாடினார்.
இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷியாமளாதேவி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அ.லலிதா, வருவாய் கோட்டாட்சியர் ச.நிறைமதி, வேப்பூர் ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் பிரபா செல்லப்பிள்ளை, மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் முத்தமிழ்ச்செல்வி மதியழகன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் மரு.கருணாநிதி, ராஜேந்திரன், வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சேகர் உள்ளிட்ட அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.