சென்னையை சேர்ந்த ஹேமந்த் – மோகனப்பிரியா தம்பதியின் மகள் சுபிக்ஷா. 12 வயதான சுபிக்ஷாவை பாடகராக்க வேண்டும் என பெற்றோர் விரும்பினர். பல நாடுகளின் தேசிய கீதத்தை சொல்லி கொடுத்தனர். உலக நாடுகளின் அங்கீகரிக்கப்பட்ட தேசிய கீதங்களாக 193 உள்ளன. சிறுமி அதையும் தாண்டி கூடுதலாக 3 நாடுகளின் தேசிய கீதங்களையும் சேர்த்து 196 தேசிய கீதங்களை சரளமாக பாடி அசத்தி வருகிறார்.
புதுவை வந்த இந்த சிறுமி தனது பெற்றோருடன் முதலமைச்சர் ரங்கசாமியை சட்டப்பேரவையில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது முதலமைச்சர் ரங்கசாமி முன்னிலையில் ஒரு சில நாடுகளின் தேசிய கீதங்களை பாடினார். இதைக்கேட்ட முதலமைச்சர் ரங்கசாமி சிறுமியின் திறமையை பாராட்டி வாழ்த்துக்களை கூறினார். 196 நாடுகளின் தேசிய கீதங்களை பாடும் சிறுமியின் முயற்சியை உலக சாதனையில் இடம்பெற அவரது பெற்றோர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த சந்திப்பின்போது பத்மஸ்ரீ டெரகோட்டா முனுசாமி உடனிருந்தார்.