கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி நகராட்சி 10வது வார்டு கவுன்சிலர் வகிதா பானு. காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். இவர் கரூர் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி குறித்து கட்சி தலைமைக்கு பலமுறை புகார்கள் அனுப்பி இருந்தார். கரூர் மாவட்டத்தில் ஜோதிமணி கட்சி வளர்ச்சிக்கு எந்தவித பணியும் செய்யாமல், கட்சி மூத்த நிர்வாகிகளை மதிக்காமலும், கூட்டணி கட்சி நிர்வாகிகளை அரவணைத்து செல்லாமலும் கட்சி விரோதசெயல்களில் ஈடுபடுவதாக வகிதாபானு குற்றம் சாட்டி இருந்தார்.
தொடர்ந்து கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் மீது கடும் அதிருப்தி காரணமாக வகிதாபானு தி.மு.கழகத்தில் சேர்ந்தார். கரூர் மாவட்ட திமுக செயலாளரும், மின்துறை அமைச்சருமான செந்தில் பாலாஜி முன்னிலையில் அவர் திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.
வகிதாபானு மேலும் கூறுகையில், ஜோதிமணியின் கட்சி விரோத செயல் குறித்து பலமுறை தெரிவித்தும் யாரும் கண்டுகொள்ளாததால்,நான் இந்த முடிவை எடுக்க வேண்டியதாகி விட்டது. இந்த நிலைமை மேலும் நீடித்தால் கரூர் காங்கிரஸ் கட்சியின் நிலைமை பெரும் கேள்விக்குறியாகி விடும்.யார் மேலிட பார்வைக்கு இதையெல்லாம் கொண்டு செல்வது என தெரியவில்லை. பள்ளபட்டியில் மேலும் பலர் ஜோதிமணியை கண்டித்து திமுக வுக்கு செல்ல தயாராகி வருகிறார்கள்’ என்றார்.