தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நேற்று பிளஸ் 2 பொதுத்தேர்வுதொடங்கியது. முதல் நாளான நேற்று மொழி(தமிழ்) பாடத்தேர்வு நடைபெற்றது. அதில் மொத்தம் விண்ணப்பித்துள்ள 8 லட்சத்து 51 ஆயிரம் மாணவர்களில் 50, 674 பேர் முதல் நாளில் ஆப்சென்ட் ஆகியுள்ளதாக பள்ளி கல்வித்துறை அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
தமிழக தேர்வு வரலாற்றில் பிளஸ்2 பொதுத்தேர்வில், அதுவும் தமிழ்த்தேர்வில் இவ்வளவு அதிகம் பேர் ஆப்சென்ட் ஆனதில்லை. குறிப்பாக கொரோனா காலத்தில் கூட 4 % மாணவர்கள் தான் அதிகபட்சமாக ஆப்சென்ட் ஆனார்கள். ஆனால் நேற்று 6% மாணவ, மாணவிகள் ஆப்சென்ட் ஆகி உள்ளனர். இனி 15ம் தேதி (நாளை)தான் பிளஸ்2 ஆங்கில தேர்வு நடக்கிறது. எனவே நாளை மாலை ஆங்கில தேர்வில் எத்தனை பேர் ஆப்சென்ட் ஆவார்கள் என்பது தெரியவரும்.
முதல்நாள் தேர்வில் ஆப்சென்ட் ஆன 50,674 பேரையும் அவர்களது இல்லம் சென்று சந்தித்து ஆப்சென்ட்டுக்கான காரணம் குறித்து அறியவும், அவர்களை மீண்டும் தேர்வு எழுத கொண்டுவரவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இவர்களுக்காக பிளஸ்2 தேர்வு முடிந்ததும் தனியாக ஒரு துணைத்தேர்வு வைக்கலாமா, அல்லது ரிசல்ட் வெளியான உடன் இவர்களுக்கு துணைத்தேர்வு நடத்தலாமா என்பது குறித்தும் அதிகாரிகள் ஆலோசிக்கிறார்கள்.
முதல் தேர்விலேயே 50,674 பேர் ஆப்சென்ட் ஆனதால் இந்த ஆண்டு ரிசல்டும் மிக மோசமாகத்தான் இருக்கும் என கூறப்படுகிறது.
முதல்நாள் ஆப்சென்ட் குறித்து தேர்வுத்துறை அதிகாரிகள் கூறும்போது, வழக்கமாக 4 முதல் 5 விழுக்காடு மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் இந்த தேர்வின் போது ஆப்சென்ட் ஆவது வழக்கமான ஒன்றுதான் இதில் அதிர்ச்சி அடைவதற்கு ஒன்றுமில்லை என்றும் தெரிவித்துள்ளனர். இருந்தாலும் 8 லட்சம் மாணவர்களில் 50 ஆயிரம் பேர் தேர்வு எழுதவில்லை என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாளையும் இதே அளவு ஆப்சென்ட் ஏற்பட்டால் கல்வியின் மீது மாணவர்களுக்கு வெறுப்பு இருப்பதாகவே கருதப்படும் என்பதால் நாளை ஆப்சென்ட் ஆகிவிடாமல் இருக்க ஆசிரியர்கள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அதே நேரத்தில் 50,674 பேர் ஏன் தேர்வு எழுதவரவில்லை என்பதை கண்டறிய கல்வித்துறை ஒரு நியாயமான விசாரணை நடத்தி, இதற்கு தீர்வு காணவேண்டும் என்பதே பெற்றோர்களின் எண்ணமும், கோரிக்கையும் ஆகும்.