உ.பி. மாநில பாஜகவை சேர்ந்தவர் பிரசாந்த்குமார் உம்ரா. இவர் வெளிமாநிலங்களில் நடந்த மோதல்களை வீடியோவில் பதிவு செய்து அதை தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்களுக்கு எதிராக நடக்கும் கலவரம் எனக்கூறி வெளியிட்டார். தமிழகத்தில் பதற்றமான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் போலி வீடியோவை அவர் வெளியிட்டு உள்ளார்.
இது குறித்து தமிழ்நாடு அரசு தக்க நேரத்தில் உரிய நடவடிக்கை எடுத்ததால் பெரிய பிரச்னை தவிர்க்கப்பட்டது. அமைதிப்பூங்காவான தமிழகத்தில் கலவரம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் வீடியோ வெளியிட்ட பிரசாந்த்குமார் உம்ராவை கைது செய்ய தமிழக போலீசார் உ.பி. விரைந்தனர்.
இதற்கிடையே அவர் டில்லி தப்பி சென்று, உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்து முன்ஜாமீன் பெற்றார். மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் மனுதாரருக்கு தற்காலிக முன்ஜாமீன் வழங்கியதுடன், சம்பந்தப்பட்டமாநிலத்துக்கு சென்று முன்ஜாமீன் பெற வேண்டும் என்ற நிபந்தனையுடன் முன் ஜாமீன் வழங்கியது.
அதன்படி பிரசாந்த்குமார் உம்ரா சார்பில் மதுரை ஐகோர்ட் கிளையில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பிரசாந்த், தான் அந்த வீடியோவை தயாரிக்கவில்லை. அதை நான் பகிர்ந்தேன். எனவே அந்த வீடியோவுக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறினார். தமிழகத்தில் பிறமாநில மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது போல அந்த வீடியோ சித்தரிக்கப்பட்டுள்ளது. எனவே ஜாமீன் வழங்க முடியாது என கூறிய நீதிபதி, இது குறித்து காவல்துறை பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார்.