அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஐந்து தளங்களைக் கொண்ட 700 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா இன்று காலை நடந்தது. விழாவுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமை தாங்கினார். விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மருத்துவமனையை திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தார்.
அதனைத் தொடர்ந்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவம் பயிலும் 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் மற்றும் மருத்துவ அங்கிகளை அமைச்சர் உதயநிதி வழங்கினார்.
அதன்பின்னர் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, வேளாண் மற்றும் உழவர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம், கூட்டுறவுத்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் 2,539 பயனாளிகளுக்கு ரூ.13.68 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் அமைச்சர் உதயநிதி வழங்கி சிறப்பித்தார்.
இவ்விழாவில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், திருமாவளவன் எம்.பி, எம்.எல்.ஏக்கள் கு. சின்னப்பா, கண்ணன், கலெக்டர் ரமண சரஸ்வதி மற்றும் அரசு உயர் அதிகாரிகள், திமுக தொண்டர்கள் பொதுமக்கள் பல்லாயிரகணக்கில் கலந்து கொண்டனர்.