Skip to content
Home » ஆன்லைன் சூதாட்டம்….. இன்ஜினியர் தற்கொலை… பரபரப்பு கடிதம்…

ஆன்லைன் சூதாட்டம்….. இன்ஜினியர் தற்கொலை… பரபரப்பு கடிதம்…

  • by Authour

கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள உப்பிலிபாளையம் ஆர்.எல்.வி. நகரை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் சங்கர் ( 29). இன்ஜினீயர். இவர் ஆன்லைனில் சூதாட்டம் ஆடி வந்துள்ளார் என கூறப்படுகின்றது. ஆரம்பத்தில் இதன் மூலமாக அவருக்கு வருமானம் கிடைத்துள்ளது எனவும். நாளடைவில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையான நிலையில் அதன் மூலம் தான் சேர்த்து வைத்திருந்த பணத்தை இழந்தார். எப்படியாவது சூதாட்டத்தில் விட்ட பணத்தை திருப்பி வென்றுவிடலாம் என்ற முயற்சியில் தனது நண்பர்களிடம் கடன் வாங்கி ஆன்லைனில் சூதாடினார். கடன் வாங்கி விளையாடிய பணத்தையும் சங்கர் இழந்தார். இதன் காரணமாக அவர் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளார். கடந்த 12ம் தேதி சங்கர் தனது பெற்றோரிடம் வேலை விஷயமாக வெளியூருக்கு செல்வதாக கூறி விட்டு வீட்டில் இருந்து புறப்பட்டார். ஆனால் அவர் வெளியூருக்கு செல்லாமல் ராம்நகர் சாஸ்திரி ரோட்டில் உள்ள தனியார் ஓட்டலில் ரூம் எடுத்து தங்கினார்.

ரூமில் இருந்த சங்கர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து ஓட்டல் ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் சங்கரின் உடலை கைப்பற்றினர். சங்கர் தற்கொலை செய்வதற்கு முன்பு கைப்பட எழுதிய கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினர். அதில் ஆன்லைனில் விளையாடுவதற்காக நண்பர்களிடம் கடன் வாங்கி இருந்ததாகவும் ஆனால் அதனை திருப்பி கொடுக்க முடியவில்லை. நண்பர்கள் என்னை மன்னிக்கவும். இவ்வாறு அதில் எழுதி இருந்தார் என தகவல் வௌியாகியுள்ளது. ஆனால் அவர் ஆன்லைனில் எவ்வளவு பணத்தை இழந்தார் என்பதையும் நண்பர்களிடம் எவ்வளவு கடன் வாங்கினார் என்பதையும் குறிப்பிடவில்லை. பின்னர் போலீசார் தற்கொலை செய்து கொண்ட சங்கரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *