தமிழ்நாடு காவல்துறை குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை தலைமை இயக்குனர் அருண் உத்தரவின் பேரில் பல்வேறு இடங்களில் ரேஷன் அரிசி உட்பட குடிமை பொருட்கள் கடத்தப்படுவது குறித்து தொடர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி கோவை மாவட்டத்தில் கடந்த மாதம் சேரன் மாநகர் அருகில் 1500 கிலோ ரேஷன் அரிசி ஆம்னி வேனில் கடத்தப்படுவதாக வந்த தகவலின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் ரேஷன் அரிசிகள் கைப்பற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்யப்பட்டு இவ்வழக்கில் ஏற்கனவே சம்பந்தப்பட்ட இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டு வந்த பாபு(47) என்பவர் தலைமறைவாக இருந்தார்.
இதனை அடுத்து போலீசார் அவரை தேடி வந்த நிலையில கோவை மாவட்ட குடிமை பொருள் வளங்கள் காவல் ஆய்வாளர் மேனகா அடங்கிய தனிப்படை குழுவினர் அவிநாசி ரோடு நீலாம்பூர் பகுதியில் நட்சத்திர ஓட்டலின் அருகில் வைத்து கைது செய்தனர். இதனையடுத்து அவர் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.