கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தாந்தோன்றிமலை அருகே 2ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு அதே பகுதியை சார்ந்த தங்கவேல் (58) என்பவர் தெருவில் விளையாடிய சிறுமியை தனது வீட்டிற்கு கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும், இவற்றை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். இச்சம்பவம் நடந்து 2 மாதம் கடந்த நிலையில் மது போதையில் இருந்த தங்கவேல் இது தொடர்பாக தெருவிற்குள் பேசியுள்ளார். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் மாவட்ட குழந்தைகள் நல அலுவலரின் அறிவுறுத்தலின்படி கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் 04.07.2022 அன்று அளித்தனர்.
இது தொடர்பாக தங்கவேல் மீது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இது தொடர்பான வழக்கு கரூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இன்று இவ்வழக்கை விசாரித்த நீதிபதி நசீமா பானு, குற்றவாளி தங்கவேலிற்கு சிறுமியை கடத்திய குற்றத்திற்காக 10 ஆண்டு சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 20 ஆண்டு சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும், கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக 2 ஆண்டு சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு 4 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து குற்றவாளி தங்கவேலுவை சிறையில் அடைக்க போலீசார் அழைத்துச் சென்றனர்.