95வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி அரங்கில் இன்று அதிகாலை 5.30 மணிக்கு தொடங்கியது. கோலாகலமாக தொடங்கிய இந்த விழாவில் உலகின் மிகச்சிறந்த படைப்பாளிகள் ஒன்றுக்கூடினார். அந்த வகையில் ‘ஆர்ஆர்ஆர்’ படக்குழு சார்பில் இயக்குனர் ராஜமெளலி, நடிகர்கள் ராம் சரண், ஜூனியர் என்டிஆர், பாடலாசிரியர் கீரவாணி, பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
இதையடுத்து இந்த விருது விழாவில் ஒரிஜினல் பாடல் பிரிவில் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் இறுதிப்போட்டியில் பங்கேற்ற நிலையில் ஆஸ்கர் விருதை வென்று சாதனை படைத்தது. இந்த விருதை இசையமைப்பாளர் கிரவாணி மற்றும் பாடலாசிரியர் சந்திரபோஸ் இணைந்து பெற்றுக்கொண்டனர். ஆஸ்கர் விருது வாங்கிய ஆர்ஆர்ஆர் படக்குழுவினருக்கு பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் ‘ஆர்ஆர்ஆர்’ படக்குழுவினருக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், ஆர்ஆர்ஆர் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் ‘ஆர்ஆர்ஆர்’ படக்குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். கீரவாணி மற்றும் ராஜமெளலிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதேபோன்று ‘தி எலிபென்ட் விஸ்பிரர்ஸ்’ படத்தை இயக்கிய கார்த்திகி கோன்சால்வ்ஸ்க்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த சாதனையை செய்த பெருமை மிக்க இந்தியர்களுக்கு தலை வணங்குகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.