மயிலாடுதுறையில் ஆட்சி மொழி சட்ட வார விழாவை முன்னிட்டு வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகளை தமிழில் அமைத்திட விழிப்புணர்வு பேரணி; மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கொடியசைத்து துவக்கி வைத்தார். தமிழ் ஆட்சி மொழி சட்டம் இயற்றப்பட்ட நாளை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் ஆட்சி மொழி சட்டவார விழா கொண்டாடப்படுகிறது. அவ்வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆட்சி மொழி சட்டவார விழா கடந்த ஒன்பதாம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகளை தமிழில் அமைத்திட வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தொடங்கிய பேரணியை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். பேரணி நகரின் முக்கிய வீதிகளின் வழியே சென்று மீண்டும் தொடங்கிய இடத்திலேயே நிறைவடைந்தது. இதில் வருவாய் அலுவலர் முருகதாஸ், கோட்டாட்சியர் யுரேகா, தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் அன்பரசி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.