கொரோனா, மற்றும் இன்புளுயன்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவர் திருச்சியில் கடந்த 11ம் தேதி மரணம் அடைந்தார். இது குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:
திருச்சியில் இறந்த வாலிபர் கோவா சென்றுவிட்டு திரும்பும்போதே உடல்நலம் பாதிக்கப்பட்டு மோசமான நிலையிலேயே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது இறப்புக்கு காரணம் கொரோனாவா அல்லது இன்புளுயன்சாவா என்பதை கண்டறிய அவரது உடல் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆய்வு முடிவுகள் வந்த பிறகு தான் அதுபற்றி கூற முடியும்.
தமிழகத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் முதல் மருத்துவ கல்லூரி மருத்துவமனை வரை அனைத்து மருத்துவமனைகளிலும் காய்ச்சலுக்கான மருந்து, மாத்திரைகள் உள்ளது. இன்புளுயன்சா காய்ச்சல் வந்தவர்கள் அச்சப்பட தேவையில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.