சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவில் கோவிலில் சித்திரை மாதம் நடைபெறும் தேரோட்டம் ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு பூச்சொரிதல் விழா இன்று தொடங்கியது. மும்மூர்த்திகளை நோக்கி மாயாசூரனை வதம் செய்த பாவம் நீங்கவும் உலக நன்மைக்காகவும், இத்திருதலத்தில் தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு எல்லா விதமான நோய்களும், தீவினைகளும் அணுகாது சகல சௌபாக்கியங்களும் கிடைக்க மரபு மாரி அம்மனே பக்தர்களுக்காக 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் இருப்பது சிறப்பம்சமாகும். வருடம்தோறும் மாசி மாத கடைசி ஞாயிறு முதல் பங்குனி மாத கடைசி ஞாயிறு கிழமை வரை அம்மன் விரதம் இருப்பது இக்கோவிலின் தனிப்பெரும் சிறப்பாகும். இதற்கு பச்சை பட்டினி விரதம் என பக்தர்கள் அழைக்கின்றனர். இந்த 28 நாட்களும் திருக்கோயிலில் அம்மனுக்கு தளிகை நைவேத்தியம் கிடையாது. துள்ளு மாவு, நீர்மோர் பானகம், மற்றும் இளநீர் மட்டுமே நைவேத்தியமாக செய்யப்படுகிறது. பூச்சொரிதல் விழாவையொட்டி, இன்று அதிகாலை விக்னேஷ்வர பூஜை, புண்ணியாக வாஜனம், அனுக்ஞை,வாஸ்து சாந்தி அங்குரார்பணம் உள்ளிட்ட பூஜைகள் முடிந்து மீனம் லக்கனத்தில் அம்மனுக்கு காப்பு கட்டுதலுடன் தொடங்கி பூச்சொரிதல் விழா நடைப்பெற்றது. முதல் வார பூச்சொரிதல் விழாவான இன்று சமயபுரம் கோவில் இணை ஆணையர் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் தட்டுகளில் பூக்களை ஏந்தி, யானையுடன் தேரோடும் வீதியில் ஊர்வலமாக சென்று அம்மனுக்கு பூக்களை சாற்றினர். இன்று முதல் பூச்சொரித்தல் விழா தொடங்கியதால் சமயபுரம் கோவில் சுற்றுவட்டார பகுதியில் விழா கோலம் பூண்டது. இதனால் திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் 13 உயர் கோபுரங்கள், மூன்று தற்காலிக பேருந்து நிலையங்கள், சமயபுரம் நான்கு ரோட்டில் இருந்து கோவில் வரை 50க்கும் மேற்பட்ட இடங்களில் சிசிடிவி காட்சிகளும், அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக தீயணைப்பு வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளன.