சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அரண்மனை வாசல் அருகே அதிமுக ஒன்றிணைய வலியுறுத்தியும், எடப்பாடி பழனிச்சாமியின் சர்வாதிகார போக்கை கண்டித்தும் ஓபிஎஸ் அணி சார்பில் இன்று காலையில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்க போலீசாருக்கு உத்தரவிடக் கோரி ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர் கே.ஆர்.அசோகன் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவின் மீதான விசாரணையின் போது அரசு வழக்கறிஞர் கீழ்பாத்தியில் சனிக்கிழமை மாலையில் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்கும் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி வருகையை கண்டித்து ஓபிஎஸ் அணி சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டள்ளது. இந்த சூழலில் இபிஎஸ் அணியின் பொதுக்கூட்டம் நடைபெறும் அதே நாளில் ஓபிஎஸ் அணியின் ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி வழங்கினால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்றார். மூத்த வழக்கறிஞர் கே.செல்லப்பாண்டியன் வாதிடுகையில், ஓபிஎஸ் அணிக்கு ஆட்சியர் அலுவலகம் அல்லது சந்திரா பூங்கா அருகே காலை 11 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரியுள்ளோம். நாங்கள் ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி கோரிய இடமும், இபிஎஸ் அணி பொதுக்கூட்டம் நடைபெறும் இடமும் வேறு. இதனால் ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என்றார். இதையடுத்து நீதிபதி, மனுதாரரிடம் ஆர்ப்பாட்டத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படாது என உறுதிமொழி பத்திரம் வாங்கிக்கொண்டு, நிபந்தனைகளின் அடிப்படையில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.