இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பாா்டா் – காவஸ்கா் டெஸ்ட் தொடர் தற்போது நடந்து வருகிறது. இந்த தொடரில் நாக்பூரில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.
டில்லியில் நடந்த 2-வது டெஸ்டில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. பின்னர், இந்தூரில் நடந்த 3வது டெஸ்டில் ஆஸ்திரேலியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. இதனால், தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த டெஸ்ட் போட்டியை நேரில் பார்க்க அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்துக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் ஆகியோர் வந்திருந்தனர். இரு பிரதமர்களும் போட்டியை அரை மணித்திற்கு மேலாக கண்டுகளித்தனர்.
நேற்று ஆட்ட நேர இறுதியில்ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் எடுத்திருந்தது. ஆஸ்திரேலிய வீரர்கள் ஹெட்(32), லபுஷேன்(3), சுமித்(38), கோம்ப்(17) ஆகியோர் அவுட் ஆனார்கள். ஷமிக்கு 2 விக்கெட்டுகளும், அஸ்வின், ஜடேஜாவுக்கு தலா ஒரு விக்கெட்டும் கிடைத்திருந்தது.
நேற்று ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் கவாஜா 104 ரன்கள் எடுத்து களத்தில் நின்றார். அவருடன் கேமரூன் கிரீனும்(49) ஆடிக்கொண்டிருந்தார். இன்று காலை 11.30 மணி அளவில் மதிய உணவு இடைவேளையின்போது ஆஸ்திரேலியா 347 ரன்கள் எடுத்தது. கவாஜா 150ரன்களும், கிரீன் 95 ரன்களுடனும் ஆடிக்கொண்டிருந்தனர்.
அதன்பின்னர் கிரீன் சதமடித்தார். இது அவரது ஆதல் சதம் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்114 ரன்கள் எடுத்தபோது அஸ்வின் பந்தில், விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அதன் பின்னர் அலெக்ஸ் கேரி வந்தார். அவர் 4 பந்தில் டக்அவுட்ஆனார். அந்த விக்கெட்டும் அஸ்வினுக்கு கிடைத்தது. அதைத்தெடர்ந்து கவாஜாவுடன் ஆடிக்கொண்டிருந்த ஸ்டார்க் 20 பந்துகளில் 6 ரன்கள் மட்டும் எடுத்த நிலையில் அஸ்வின் பந்தில் ஸ்ரேயஸ் அய்யரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
இன்றைய 3வது செசன் போட்டி தொடங்கியதும் அக்சார்பட்டேல் வீசிய முதல் பந்திலேயே கவாஜா எல்.பி.டபுள்யு முறையில் அவுட் ஆனாா். ஆனால் நடுவர் அவுட் கொடுக்கவில்லை. இந்திய அணி சார்பில் ரிவியூ கேட்கப்பட்டது. அப்போது கவாஜா அவுட் உறுதியானது. அப்போது கவாஜா 180 ரன்கள் எடுத்திருந்தார். 422 பந்துகளில் அவர் இந்த ரன்களை குவித்திருந்தார். இதில் 21 பவுண்டரிகள் அடங்கும். மாலை 3.30 மணி அளவில் ஆஸ்திரேலியா 458 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்திருந்தது. லயன், மர்பி ஆகியோர் ஆடிக்கொண்டிருந்தனர். மர்பி 41 ரன் எடுத்திருந்த நிலையில் அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார். இதன் மூலம் இந்த டெஸ்டில் அஸ்வின் 5 விக்கெட்டுகளை சாய்த்து உள்ளார்.
இந்தியாவில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் இதுவரை 26 டெஸ்ட்களில் அஸ்வின் தலா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்து உள்ளார். இதன் மூலம் இவர் கும்ப்ளே சாதனையை முறியடித்தார். கும்ப்ளே இந்தியாவில் 25 டெஸ்ட்களில் தலா 5 விக்கெட் எடுத்து இருந்தார். அந்த சாதனையை முறியடித்த பின்னர் தொடர்ந்து பந்து வீசிய அஸ்வின், லயன் விக்கெட்டையும்(34) கைப்பற்றினார். இதனால் 480 ரன்னுக்கு ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. 167.2 ஓவரில் இந்த ரன்களை சேர்த்திருந்தனர். ஆஸ்திரேலியாவில் கவாஜா, கிரீன் ஆகியோர் சதமடித்திருந்தனர். மற்ற வீரர்கள் அவ்வளவாக சோபிக்க வில்லை.
இதன் மூலம் இந்த போட்டியில் அஸ்வின் 6, ஷமி 2, அக்சார்பட்டேல், ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை எடுத்தனர்.