அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். சத்து மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு மாணவி உயிரிழந்த விவகாரத்திலும் இதுபோன்ற சோகம் நிகழ்ந்துள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:
நீலகிரி மாவட்டம், உதகை அருகே காந்தல் பகுதியில் உள்ள நகராட்சி உருது நடுநிலைப் பள்ளியில் சுகாதாரத் துறை சார்பில் மாணவர்களுக்கு ஊட்டச்சத்து(இரும்பு சத்து மற்றும் வைட்டமின்சத்து) மாத்திரைகள் அண்மையில் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் இந்தப் பள்ளியில் குழந்தைகளிடம் சத்து மாத்திரை கிடைத்துள்ளது. இந்த மாத்திரைகளை மாணவிகள் வாரம் ஒரு முறை சாப்பிடவேண்டும். அதை சாப்பிடும் தினத்தில் ஆசிரியர்கள் வழங்க வேண்டும்.
ஆனால் ஆசிரியர் ஒருவர் தனது மேஜையின் மீது மாத்திரைகள் அடங்கிய டப்பாவை வைத்துவிட்டு போய்விட்டார். இதைப்பார்த்த மாணவ, மாணவிகள், யார் அதிகமாக சத்து மாத்திரைகள் உட்கொள்வது என அவர்களுக்குள் பந்தயம் கட்டி மாத்திரைகளை அள்ளி சாக்லேட் போல சாப்பிட்டதாக கூறப்படுகிறது.
இதில் 8 ம் வகுப்பு மாணவிகள் 4 பேர் அளவுக்கு அதிகமாக ஊட்டச்சத்து மாத்திரைகளை உட்கொண்டுள்ளனர். ஒருவர்70 மாத்திரைகளும், 3 பேர்-தலா 30 மாத்திரைகளும் உட்கொண்டதாகத் தெரிகிறது.
அளவுக்கு அதிகமாக சத்து மாத்திரைகளை எடுத்துக்கொண்ட 4 மாணவிகளும் சிறிது நேரத்தில் வாந்தி எடுத்து மயக்கம் அடைந்தனர். இதனைத் தொடர்ந்து அந்த மாணவிகளை உதகை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டது. நிலைமை மோசமாக இருந்ததால் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
கோவை அரசு மருத்துவசு கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 4 மாணவிகளில் 70 மாத்திரைகள் உட்கொண்ட மாணவியான உதகையைச் சேர்ந்த சலீம் மகள் ஜெய்பா பாத்திமாவுக்கு கல்லீரல் பாதிக்கப்பட்டதால் சென்னை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல நேற்று டாக்டர்கள் முடிவு செய்தனர்.
ஜெய்பா பாத்திமாவுக்கு கல்லீரல் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்ததால், உடனடியாக அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும் என்பதால் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமளைக்கு கொண்டு செல்லுமாறு பரிந்துரைக்கப்பட்டது.
எனவே அவரை ஆம்புலன்ஸில் ஏற்றி சென்னை புறப்பட்டனர். சேலம் அருகே சென்றுகொண்டிருந்தபோது ஜெய்பா பாத்திமாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஆம்புலன்ஸ் பணியாளர்கள் சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாணவியை அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தார். மற்ற 3 மாணவிகளில் மேலும் ஒருவருக்கு கல்லீரலில் லேசான பாதிப்பு இருப்பதாகவும், மீதமுள்ள இருவர் நலமாக இருப்பதாகவும் கோவை அரசு மருத்துவமனை முதல்வர் அ.நிர்மலா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சுகாதார பணிகள் துணை இயக்குநர் பாலுசாமி கூறியதாவது;
குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து மாத்திரை வாரம் ஒரு முறை மதியம் சாப்பிட்டபின் அதற்காக நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் மேற்பார்வையில் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். இவ்வளவு மாத்திரை மொத்தமாக மாணவிகளுக்கு எவ்வாறு கிடைத்தது என்று தெரியவில்லை. இது குறித்து கல்வித் துறை அதிகாரிகள் மூலம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.
இச்சம்பலம் தொடர்பாக நகராட்சி உருது பள்ளி தலைமையாசிரியா முகமது அமீன், பள்ளி ஆசிரியா மற்றும் கண்காணிப்பு அலுவலர் கலைவாணி (மாத்திரை வழங்குவதற்கு பொறுப்பானவர்)ஆகியோரைப் பணியிடை நீக்கம் செய்து நீலகிரி மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக உதகை மேற்கு காவல் ஆய்வாளர் மீனா பிரியா தலைமையிலான போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:
பள்ளியில் கடந்த, 6 ம் தேதி சுகாதாரத்துறை சார்பில் ஊட்டச்சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டன.அதில் 8 ம் வகுப்பு படிக்கும், நான்கு மாணவிகள் மாத்திரைகளை அதிகளவில் உட்கொண்டனர்.இதையடுத்து நான்கு மாணவிகளும் மயக்கமடைந்தனர்.
ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக அன்றைய தினமே கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு மாணவியருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், 70 மாத்திரைகளை உட்கொண்ட ஒரு மாணவியின் உடல்நிலை மோசமானது.அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கல்லீரல் பாதிப்பு இருப்பது தெரிந்தது.
இதையடுத்து மாணவி, 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.இந்நிலையில், சேலம் அருகே சென்று கொண்டிருந்த போது, மாணவிக்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
தொடர்ந்து மாணவியின் கால்களில் வீக்கம் ஏற்பட்டது.இதையடுத்து சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் அனுமதித்தனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இறந்துபோன மாணவி ஜெய்பா பாத்திமாவின் தாயாரும் அதே பள்ளியில் பெற்றோர், ஆசிரியர் கழகத்தால் நியமிக்கப்பட்டு ஆசிரியையாக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாணவி இறந்த தகவல் அறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்ததுடன், மாணவி குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டார். சிகிச்சையில் உள்ள மாணவிகள் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சமும் வழங்க உத்தரவிட்டார். பள்ளியில் சத்து மாத்திரை சாப்பிட்டு மாணவி இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.