தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த பலர் தங்களது இன்னுயிரை மாய்த்து வருகிறார்கள். எனவே இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர். ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதித்து தமிழக சட்டசபையில் கடந்த ஆண்டு அக்டோபர் 19-ந்தேதி அனைத்து கட்சிகளின் ஆதரவோடு ஒருமனதாக மசோதா நிறைவேற்றப்பட்டது. பின்னர் இந்த மசோதா கவர்னரின் ஒப்புதலுக்காக கடந்த ஆண்டு அக்டோபர் 28-ந்தேதி அனுப்பி வைக்கப்பட்டது. பல நாட்களாக கிடப்பில் போடப்பட்ட அந்த மசோதாவை கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று முன்தினம் திடீரென தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பினார். கவர்னரின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.
தமிழக சட்டசபை வருகிற 20-ந்தேதி கூடுகிறது. இதனையொட்டி தமிழக அமைச்சரவை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று மாலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், தமிழக அரசின் பட்ஜெட் மற்றும் புதிய திட்டங்கள், நிதி ஒதுக்கீடு ஆகியவற்றுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. தமிழகத்தில் புதிதாக தொடங்கப்படும் தொழில்கள், விரிவாக்கம் செய்யப்படும் தொழில்கள் ஆகியவற்றுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அமைச்சரவை கூட்டம் குறித்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அளித்த பேட்டி வருமாறு:-
சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் உண்டு என்று ஐகோர்ட்டு கூறியிருக்கிறது. ஆனால் அரசுக்கு அதிகாரம் இல்லை என்று கவர்னர் கூறுகிறார். அரசியல் சாசனத்தின் 34-வது பிரிவின்படி, மாநில பட்டியலில் உள்ள பொது அமைதி, பொது சுகாதாரம், விளையாட்டு, பொழுதுபோக்கு, ‘பெட்டிங்’ மற்றும் சூதாட்டம் ஆகியவற்றை மையமாக வைத்துத்தான் சட்டம் இயற்றினோம்.
ஆனால் கவர்னர் அதன் 31-வது பிரிவின்படி, ‘திறமைகளுக்கான விளையாட்டு’ என்று எடுத்துக்கொண்டு, அதில் சட்டம் இயற்ற முடியாது, அதிகாரம் இல்லை என்று கூறி அரசின் விளக்கத்தை நிராகரித்திருக்கிறார். அது ஏற்கக்கூடியது அல்ல.
எனவே, ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றி, ஒப்புதலுக்காக மீண்டும் கவர்னரிடம் அனுப்பி வைக்க வேண்டும் என்று அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. சட்டம் இயற்ற அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று கூறி அதை திருப்பி அனுப்புவோம்.
நடைபெறவுள்ள சட்டசபை கூட்டத்தொடரிலேயே இந்த மசோதா மீண்டும் கொண்டு வரப்படும். 2-ம் முறையும் அதை கவர்னருக்கு அனுப்பி வைப்போம். அதையும் கிடப்பில் போட்டால் அப்போது பார்க்கலாம்.ஆன்லைன் விளையாட்டை நடத்துகிறவர்களை கவர்னர் ரகசியமாக சந்தித்ததாக ஒரு தகவல் உள்ளது. இவ்வாறு அமைச்சர் ரகுபதி கூறினார்.