Skip to content
Home » தஞ்சாவூர் மாவட்டத்தில் 90 டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை சரிவு…

தஞ்சாவூர் மாவட்டத்தில் 90 டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை சரிவு…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும்போது, இந்தாண்டு பிப்ரவரி மாதம் 90 கடைகளில் விற்பனை குறைந்துள்ளது. இதில் அதிகபட்சமாக கும்பகோணம் அருகே உள்ள கூகூர் டாஸ்மாக் கடையில், கடந்த ஆண்டு 1,220 மதுபானப் பெட்டிகள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், கடந்த பிப்ரவரியில் 595 மதுபான பெட்டிகள் மட்டுமே விற்பனையானது. அதேபோல, திருவையாறு, வல்லம் வடக்கு உட்பட 90 கடைகளில் விற்பனை சரிவடைந்துள்ளதால் மாவட்டத்தின் விற்பனை இலக்கு குறியீடும் குறைந்துள்ளது.

இதுகுறித்து உரிய விளக்கம் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடைகளின் மேற்பார்வையாளர்களுக்கு நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது.

இதுகுறித்து டாஸ்மாக் பணியாளர்கள் கூறியதாவது…  டாஸ்மாக் கடைகளில் ஆண்டுக்கு ஆண்டு விற்பனை அதிகரித்து தான் வருகிறது. ஆனால் கடந்தாண்டு பிப்ரவரி மாதத்துடன், இந்தாண்டு பிப்ரவரி மாதத்தை ஒப்பிட்டு, விற்பனை குறைந்ததாகக் கூறி பணியாளர்களிடம் நிர்வாகம் விளக்கம் கேட்டுள்ளது. விற்பனை குறைவுக்கு காரணம் கேட்டு முதல்முறையாக விளக்கம் கேட்பதால் பணியாளர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது என்றனர்.

தஞ்சாவூர் மாவட்ட எஸ்.பி.யாக ஆசிஷ்ராவத் கடந்த மாதம் பொறுப்பேற்றார். அதன்பின், டாஸ்மாக் கடைகள் இரவு 10 மணிக்கு மூடப்பட்ட பிறகு, பார்களில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்வதையும், பொது இடங்களில் மது அருந்துவதையும் தடுக்க சிறப்பு காவலர்கள் அடங்கிய குழுக்களை அமைத்து கடும் நடவடிக்கை மேற்கொண்டார். அத்துடன், உரிய நடவடிக்கை எடுக்காத போலீஸாரை ஆயுதப்படைக்கு மாற்றினார். இதனால் தான் டாஸ்மாக் கடைகளில் விற்பனை குறைந்ததாக மதுப்பிரியர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *