தென்காசி மாவட்டம் புளியரை சோதனைச்சாவடி வழியாக கேரளாவுக்கு லாரியில் கடத்திய 16.9 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.
தென்காசி மாவட்ட எஸ்.பி. கிருஷ்ணராஜ் உத்தரவின் பேரில், தமிழக – கேரள எல்லையான புளியரை சோதனைச்சாவடியில் 24 மணிநேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், நேற்று உதவி ஆய்வாளர் சஞ்சய் காந்தி தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தமிழகத்தில் இருந்து கேரளா நோக்கி சென்ற லாரியை போலீசார் நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது, லாரியில் ஏராளமான மூட்டைகளில் ரேஷன் கடத்திச்செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக லாரியில் இருந்த குறிச்சிகுளம் பகுதியை சேர்ந்த பொன்ராஜ்(32), சங்கர் நகரை சேர்ந்த ராஜலிங்கம்(32) ஆகியோரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கெண்டனர். அதில், ரேஷன் அரிசியை சட்டவிரோதமாக கேரளாவுக்கு கடத்திச்சென்றது தெரியவந்தது. இதனை அடுத்து, புளியரை போலீசார் இருவரையும் செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 16.9 டன் ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து கைதான இருவர் மற்றும் ரேஷன் அரிசி, உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைககப்பட்டனர்.