தமிழ்நாடு சட்டமன்றப்பேரவை பொதுக்கணக்குக்குழுவின் தலைவரும், ஸ்ரீபெரும்புதுார் சட்டமன்ற உறுப்பினருமான கு.செல்வப்பெருந்தகை தலைமையில், சட்டமன்ற உறுப்பினர்கள் தி.வேல்முருகன் (பண்ருட்டி), டாக்டர் சி.சரஸ்வதி (மொடக்குறிச்சி), ம.சிந்தனை செல்வன் (காட்டுமன்னார் கோவில்), கே.மாரிமுத்து (திருத்துறைப்பூண்டி) ஆகியோர் இன்று (08.03.2023) பெரம்பலூரில் ஆய்வு நடத்தினர். மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் முன்னிலையில் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து நேரில் பார்வையிட்டனர்.
கவுல்பாளையம் ஊராட்சியில் பெரம்பலூர் மாவட்டத்தில் வாழும் இலங்கை தமிழ் மக்களுக்காக ரூ.3.60 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் 72 வீடுகளின் கட்டுமானப்பணிகளை பொதுக்கணக்குக்குழுவினர் பார்வைிட்டனர்.
எளம்பலூர் சமத்துவபுரத்தில் சிமெண்ட்சாலை அமைத்தல், பூங்கா மேம்பாட்டு பணி, சமுதாயக் கூடம் புனரமைத்தல், நூலகம் பழுது பார்த்தல், அங்கன்வாடி பழுது பார்த்தல், நியாய விலைக்கடை பழுது பார்த்தல், நுழைவு வாயில் பழுது பார்த்தல் மற்றும் 100 வீடுகளை பழுதுபார்த்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள்ரூ.79.40லட்சம் மேற்கொள்ளப்பட்டுள்ளதை பொதுக்கணக்குக்குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செதனர்.
அதனைத்தொடர்ந்து அங்கிருந்த தந்தை பெரியார் திருவுருவச்சிலைக்கு பொதுக்கணக்குக்குழு தலைவரும், உறுப்பினர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பெரம்பலுார் அரசு தலைமை மருத்துவமனையில் ஆய்வு செய்த பொதுக்கணக்குக்குழுவினர் சுமார் ஆறு கோடி மதிப்பீட்டில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டுள்ள MRI ஸ்கேன் கருவிகளின் செயல்பாடு, பயன்பாடு குறித்து ஆய்வு செய்தார்கள். அங்கிருந்த பொதுமக்களிடம் மருத்துவமனையில் அடிப்படை வசதிகள், வழங்கப்படும் சிகிச்சைகள் முறையாக உள்ளதா என்று கேட்டறிந்தனர்.
பின்னர் அரசு தலைமை மருத்துவமனையில் இருந்து வட்டாட்சியர் அலுவலகம் செல்லும் வழியில் அமைந்துள்ள திருநகரில் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட சுமார் 1.5 ஏக்கர் அரசு நிலம் பாதுகாக்கப்பட்டு, முள்வேலி அமைக்கப்பட்டுள்ளதை பொதுக்கணக்குக்குழுவினர் பார்வைிட்டனர்.
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றியத்தில் காரை, கொளக்காநத்தம் கரம்பியம் மற்றும் பிலிமிசை ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய நிலப்பரப்பு பல கோடி ஆண்டுகளுக்கு முன்னால் கடலால் சூழப்பட்டு, கடல் வாழ் உயிரினங்கள் வாழ்ந்ததற்கான தரவுகளையும் அந்த உயிரினங்களுடைய படிமங்களையும் கண்டறிந்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பெரம்பலுார் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அமோனைட்ஸ் மையத்தினை பொதுக்கணக்குக்குழுவினர் பார்வையிட்டனர்.