திருச்சி திருவெறும்பூர் அடுத்த வாழவந்தான்கோட்டை ஈச்சங்காடு பகுதியைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவரது மகன் கோபி (32).இவர் அதிமுக நிர்வாகியாக உள்ளார். நேற்று இரவு துவாக்குடி அண்ணா வளைவு பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் கோபி டிபன் ஆர்டர் கொடுத்துவிட்டு சென்றவர் சிறிது நேரம் கழித்து டிபனை வாங்க வந்தார். அப்போது 3 பேர் கோபியை மடக்கி அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.
கொலைவெறி கும்பல் அரிவாளால் வெட்டியபோது முதல் வெட்டு குறிதவறி கல்லாப்பெட்டியில் விழுந்தது. இதனால் ஊஷாரான கோபி ,அவர்களிடம் இருந்து கோபி தப்பி ஓட முயன்ற போது 3 பேரும், கோபியை விரட்டி பிடித்து சரமாரியாக வெட்டினர். இதில் கோபி அந்த இடத்திலேயே விழுந்து ரத்த வெள்ளத்தில் பலியானார். பின்னர்கொலைக் கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது.
இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் துவாக்குடி போலீசார் விரைந்து வந்து கொலை செய்யப்பட்ட கோபியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து, கொலையாளிகளை தேடி வருகிறார்கள். முன் விரோதத்தால் இந்த கொலை நடந்ததா? என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கிறார்கள்.