திருச்சி மாவட்டம் சமயபுரம் அடுத்து இருங்களூர் ஊராட்சிக்குட்பட்ட புறாத்தாக்குடி பகுதியில்150 குடும்பத்தினர் வசிக்கிறார்கள். இதில் 5 குடும்பத்தினர் மட்டும் ஒருகுறிப்பிட்ட இடத்தில் அரசு முத்திரையுடன் ஒரு பேனர் வைத்தனர். அதில் தங்கள் சமூகத்துக்கு சொந்தமான இடம் இது என குறிபிடப்பட்டு இருந்தது. அதில் திருச்சி கலெக்டர் உத்தரவு என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த பேனர் 10க்கும் மேற்பட்ட இடங்களில் அரசு முத்திரையுடன் வைக்கப்பட்டு இருந்தது.
இது குறித்து தகவல் அறிந்த லால்குடி சரக காவல்துறை துணை கண்காணிப்பாளர் அஜய் தங்கம், மண்ணச்சநல்லூர் வட்டாட்சியர் சக்திவேல் முருகனை தொடர்பு கொண்டு இது குறித்து தெரிவித்த பின் திடீரென புறாத்தாக்குடி பகுதியில் ஆய்வு செய்தனர். இதில் பல்வேறு இடங்களில் செந்தில், ஆசைத்தம்பி, வேல்முருகன், சின்னச்சாமி, சுரேஷ் ஆகியோர் குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டும் சட்டத்திற்கு புறம்பாக அரசு முத்திரை மட்டும் திருச்சி மாவட்ட ஆட்சியரின் பெயரை தவறாக பயன்படுத்தி கடந்த 3 வருடமாக அந்த இடத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர் என்பதை கண்டுபிடித்தனர்.
மேலும் அண்ணாநகர் பகுதியில் போலீஸ் பாதுகாப்புடன் விசாரித்த போது கிராமப்புற கட்டிடங்கள் பராமரிப்பு மற்றும் புதுப்பித்தல் திட்டத்தின் கீழ் 60 ஆயிரம் மதிப்பீட்டில் சுய உதவி குழுவிற்கென கட்டிடத்தை கட்டி உள்ளனர்.
இந்தக் கட்டிடத்தையும் மேற்கண்ட ஐந்து பேர் மட்டும் தங்கள் குடும்ப பயன்பாட்டுக்கு வைத்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து மண்ணச்சநல்லூர் வட்டாட்சியர் மற்றும் டிஎஸ்பி அஜய் தங்கம் விசாரித்துஅப்பகுதி மக்களின் புகார் மனுவை பெற்றுக் கொண்டு மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைத்தனர்.
அப்பகுதியில் உள்ள அனைத்து மக்களுக்கும் அந்த கட்டிடம் பயன்பாட்டுக்கு வர வேண்டும் எனவும், 5 பேர் மட்டும் சட்டத்திற்கு புறம்பாக பயன்படுத்தி வருகின்றனர் இதனை மாவட்ட ஆட்சியரும் அதிகாரிகளும் தடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் மற்றும் டிஎஸ்பி தெரிவித்தனர்.