மயிலாடுதுறை மாவட்டத்தின் 2-வது ஆட்சியராக மகாபாரதி கடந்த மாதம் 5-ம் தேதி பொறுப்பேற்றார். அவர் ஆட்சியராக பொறுப்பேற்றது முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வளர்ச்சி திட்டப் பணிகள், சுகாதாரம், மாணவர்களின் நலன் குறித்தும் தினந்தோறும் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்து பணிகளை சிறப்பாக செய்து முடிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
இன்று மயிலாடுதுறை ஆதிதிராவிடர் அரசினர் கல்லூரி மாணவர் விடுதியில் மாவட்ட ஆட்சித் தலைவர் மகாபாரதி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவர்களுக்கு சரிவர தரமான உணவு வழங்கப்படாமலும், விடுதியை சரிவர பராமரிப்பு செய்யாமலும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விடுதியை சுத்தமாக, பராமரிக்காக விடுதி காப்பாளர் மோகன் மற்றும் சமையலர்கள் சித்தார்த்தன், ஜெயபிரகாஷ், ஆகியோரை பணி இடமாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு பிறப்பித்தார். மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தான் ஆய்வு செய்த இடங்களில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் செயல்படுத்தப்பட்டுள்ளதா என்று மீண்டும் அதே இடத்தில் ஆய்வு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.