தமிழ் நாட்டில் கலவரம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் உ.பி. பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் பிரசாந்த் குமார் உம்ரா என்ற நபர், தமிழகத்தில் பீகார் தொழிலாளர்கள் கொல்லப்படுகிறார்கள், தாக்கப்படுகிறார்கள் என பொய்யான வீடியோ வெளியிட்டார். தமிழக அரசு அந்த போலி வீடியோவை உடனடியாக கண்டறிந்து அதனால் தமிழகத்தில் எந்தவித பிரச்னையும் ஏற்படாமல் நடவடிக்கை எடுத்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் கலவரம் ஏற்படுத்த வேண்டும் என்ற கெட்ட நோக்கத்துடன் போலி வீடியோ வெளியிட்ட உ‘.பி. பாஜக செய்தி தொடர்பாளர் மீது தூத்துக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதன் பேரில் அவரை கைது செய்ய தமிழக போலீசார் டில்லி விரைந்தனர். இதற்கிடையே அந்த நபர் டில்லி ஐகோர்ட்டில் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். அவர் நினைத்தபடி முன்ஜாமீனும் கிடைத்து விட்டது. அதாவது வருகிற 20ம் தேதி வரை அவருக்கு தற்காலிக முன் ஜாமீன் வழங்கி ஐகோர்ட் இன்று உத்தரவிட்டது. எனவே அவரை கைது செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
அப்போது வதந்தி பரப்பிய பாஜக நிர்வாகி பிரசாந்த் உம்ரா, இதுவரை மன்னிப்புகூட கேட்கவில்லை என டில்லி நீதிமன்றத்தில் தமிழக அரசு குற்றம்சாட்டியது. வந்தந்தியை பரப்புவது இந்தியாவையே பிளக்கும் செயல், தேசவிரோத செயல் என வாதிடப்பட்டது. இதனைதொடர்ந்து உமாராவை மார்ச் 20ம் தேதி வரை கைது செய்ய தடை விதித்த டில்லி ஐகோர்ட்டு தமிழ்நாட்டில் உள்ள தூத்துக்குடி நீதிமன்றத்தை நாட உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது.