தென்காசி மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அதில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை கொண்டு தனியார் நிலத்தில் வேலை பார்க்க செய்வதாகவும், தனியார் நிலத்தில் வேலை பார்க்க வைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு விசாரணைக்கு வந்தபோது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் 100 நாள் வேலை திட்டத்தின் நடைமுறைகள் மற்றும் வழக்கு குறித்து ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும், தமிழ்நாடு முழுவதும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டங்கள் முறையாக நடைபெறவில்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. எனவே, மணிகண்டன் என்பவர் தொடர்ந்த வழக்கை ஜனவரி 4-ம் தேதிக்கு உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை ஒத்திவைத்தது .