தஞ்சை மாவட்டம் கும்பகோணம் கர்ணக்கொல்லை தெருவை சேர்ந்த தனபாலன் என்பவரின் மகன் கரிகாலன். இவரும், ராஜா என்பவரும் சேர்ந்து பெரியக்கடைத்தெரு முடுக்குச்சந்தில் நகைகளுக்கு பாலீஸ் போடும் கடை வைத்துள்ளனர்.
இவர்கள் கடந்த 4-ம் தேதி இரவு கடையை பூட்டி விட்டு சென்றனர். மறுநாள் 5-ம் தேதி கடைக்கு வந்து பார்த்த போது முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது கடையில் இருந்த 19 கிராம் தங்க செயின், 10 கிராம் ஜிமிக்கி, 16 கிராம் தங்க கட்டி, 4 கிராம் செயின் உட்பட மொத்தம் 55 கிராம் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ. 2 லட்சமாகும்.
இது குறித்து கரிகாலன் கும்பகோணம் கிழக்கு போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் கிழக்கு போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்தில் இருந்து ரேகைகளை பதிவு செய்தனர். போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதுகுறித்து கும்பகோணம் கிழக்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் கும்பகோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.