புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டில்லி மாநில முன்னாள் துணை முதல்-மந்திரியான மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார்.அவரை சி.பி.ஐ. காவலில் எடுத்து விசாரிக்கடில்லி ரோஸ் அவென்யூ சிறப்பு கோர்ட்டு முதலில் 4-ந்தேதி வரை அனுமதி அளித்து உத்தரவிட்டது. இந்த வழக்கில் சி.பி.ஐ. அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்று, சிசோடியாவின் சி.பி.ஐ. காவல் 2-வது முறையாக 6-ந்தேதி (இன்று) வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், சிசோடியாவின் காவல் இன்று முடிவடையும் சூழலில், அவரைடில்லி ரோஸ் அவென்யூ சிறப்பு கோர்ட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று ஆஜர்படுத்தினார்கள். அப்போது, சிசோடியாவுக்கு 20-ந்தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சிசோடியாவின் வழக்கறிஞர் கோர்ட்டில், ஒரு ஜோடி மூக்கு கண்ணாடி, டைரி, பேனா மற்றும் பகவத் கீதை ஆகியவற்றை சிசோடியா தன்னுடன் எடுத்து செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என கோரினார்.
இந்த கோரிக்கையை ஏற்று கோர்ட்டு அதற்கு அனுமதி வழங்கியது. தொடர்ந்து, கோர்ட்டின் சிறப்பு நீதிபதி எம்.கே. நாக்பால் கூறும்போது, சிசோடியா தனக்கு தேவையான மருந்துகளை உடன் எடுத்து செல்லவும் அனுமதி அளிக்கப்படுகிறது. தியானம் செய்யும் அறையில் தன்னை வைத்திருக்க வேண்டும் என சிசோடியா தரப்பில் விடுத்த வேண்டுகோளை, சிறை கண்காணிப்பாளர் பரிசீலனை செய்யும்படியும் நீதிபதிஉத்தரவிட்டு உள்ளார்.