கோவை கணபதி மாநகர் பகுதியில் லிட்டில் கிங்டம் மெட்ரிகுலேஷன் பள்ளி செயல்பட்டு வந்த நிலையில் கடந்த ஆண்டு எவ்வித முன்னறிவிப்புமின்றி பள்ளி மூடப்பட்டது. அப்பள்ளியில் பல்வேறு குழந்தைகள் அரசின் இலவச கல்வி திட்டத்தின் கீழ் படித்து வந்தனர். இந்நிலையில் அப்பள்ளியானது மூடப்பட்டதால் குழந்தைகளின் பெற்றோர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் முறையிட்டிருந்தனர். அப்போது தங்கள் குழந்தைகளை எந்த பள்ளிகளில் வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளுங்கள் எனவும் அங்கு இலவச கல்வி திட்டத்தின் கீழ் குழந்தைகள் பயில நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்ததாக பெற்றோர்கள் கூறியிருந்தனர். இந்நிலையில் கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாகியும் இலவச கல்வி திட்டத்தின் கீழ் குழந்தைகள் பயில்வதற்கு அதிகாரிகள் எவ்வித நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனவும் குழந்தைகளை படிக்க வைப்பதற்கு மிகவும் சிரமப்படுவதாகவும் மீண்டும் பெற்றோர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.மனு அளிக்க குழந்தைகளுடன் வந்த பெற்றோர்கள் பதாகைகளை ஏந்தி அவர்களது கோரிக்கையை வலியுறுத்தினர். மேலும் உடனடியாக மாவட்ட ஆட்சியர் இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.