சென்னை பெருநகரில் தற்போது 100 சதவீதம் அரசு போக்குவரத்து கழக பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. இப்பபோது முதன் முதலாக சென்னை நகரில் தனியார் பஸ்களை இயக்க அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் சென்னையில் இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
சென்னை மாநகராட்சியில் தனியார் பேருந்து இயக்கம் குறித்து தவறான செய்திகளை பரப்பி வருகிறார்கள். போக்குவரத்து கழகத்தை பொறுத்தவரையில் கிராஸ் காஸ்ட் காண்ட்ரக்ட் முறையில் 500 பேருந்துகளை மாநகர போக்குவரத்து கழகம் செயல்படுத்தலாம் என்று உலக வங்கி கருத்துக்களை வழங்கியுள்ளது. அந்த கருத்துக்களின் அடிப்படையில் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்திலேயே செய்தி வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில் அரசின் நடைமுறையின் அடிப்படையில் இது கொண்டுவரப்பட்டுள்ளது. சென்னையில் அரசு வழித்தடத்தில் தனியார் பேருந்துகளை இயக்குவது குறித்த சாதக பாதகங்களை ஆய்வு செய்து சமர்ப்பிக்கப்படும் அறிக்கையின் அடிப்படையில் இதுகுறித்து அரசு நடவடிக்கை எடுக்கும்.
அரசின் கட்டுப்பாட்டில் உள்ள வழித்தடத்தில் தனியார் பஸ் இயக்கப்படும். அதே நேரத்தில் அரசு பஸ்களும் இயங்கும். யாரும் வேலை இழக்க மாட்டார்கள். தேவை அதிகம் உள்ள வழித்தடங்களில் தனியார் பஸ்கள் இயக்கலாமா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. தற்போது அரசு நகர பஸ்களில் தொடரும் சலுகைகள் அப்படியே தனியார் பஸ்களிலும் தொடரும். மாணவர்கள், மகளிர், முதியயோர்களுக்கான சலுகைகள் ரத்து செய்யப்படமாட்டாது.
தனியார் பஸ்களில் முடிவு எடுக்கும் அதிகாரம் அரசிடமே இருக்கும். டில்லி, கேரளா போன்ற மாநிலங்களில் இதுபோன்று பஸ்கள் இயக்கப்படுகிறது. மற்ற மாநிலங்களில் டீசல் விலை உயரும்போதெல்லாம் கட்டணம் உயர்த்தப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் அப்படி உயர்த்தப்படவில்லை. கர்நாடகத்தில் தற்போது கூட பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
2021 பிப்ரவரி யில் அதிமுக ஆட்சி காலத்தில் தான் சென்னையில் தனியார் பஸ் இயக்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.எனவே இன்று மாலையில் அதிமுக போராட்டம் நடத்த இருப்பதை வைிட வேண்டும். எனவே தொழிற்சங்கத்தினர் போராட்டத்தை கைவிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
மக்கள் தொகை அடிப்படையில் கூடுதல் வசதி தேவைப்படும் நிலையில் இந்த தனியார் பஸ் இயக்கப்படுகிறது. இது தனியார் பஸ் என்று சொல்ல முடியாது. இது அரசு வழித்தடத்தில் இயங்கும் தனியார் பஸ்கள். அரசின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு தான் இது இயக்கப்படும். ரூட், கட்டணம் ஆகியவற்றை அரசு தான் நிர்ணயிக்கும். பொருளாதார நெருக்கடி, கடந்த ஆட்சி காலத்தில் போதிய பஸ்கள் வாங்காததால் ஏற்பட்டுள்ள நெருக்கடி ஆகியவற்றை சமாளிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த தனியார் பஸ் சேவை குறித்து 3 மாதத்தில் அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.