நாகை மாவட்டம் நாகூரில் கடலுக்கு அடியில் போடப்பட்டிருந்த சிபிசிஎல் நிறுவனத்தின் கச்சா எண்ணெய் குழாயில் கடந்த 2ம் தேதி உடைப்பு ஏற்பட்டது இதன் காரணமாக பல லட்சம் லிட்டர் கச்சா எண்ணெய்யின் கழிவுகள் கடலில் பரவி சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டதுடன், அப்பகுதி மீனவ கிராம மக்களுக்கு கண் எரிச்சல் உள்ளிட்ட உபாதைகள் உண்டானது. இதனை சரி செய்து, எண்ணை படலம் மற்றும் ராட்சச குழாய்களை நிரந்தரமாக அப்புறப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி நாகூர் பட்டினச்சேரி மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லாமல், கடந்த இரு தினங்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதற்கிடையே பைப் லைனை சரி செய்யும் பணியில் சிபிசியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இதற்காக பைப்லைன் செல்லும் பாதையை மணல் கொண்டு நிரப்பி அலையைத் தடுத்து ஓட்டையை அடைத்து அதனை சரி செய்ததாக நேற்றிரவு சிபிசிஎல் பொது மேலாளர் ஆனந்த் தெரிவித்திருந்தார் இதனிடையே இன்று காலை எண்ணை குழாயில் கசிவு இருக்கிறதா? என்பது குறித்து ஏழரை டன் அழுத்தத்தில் பம்பிங் செய்து பார்த்தனர். அப்போது கடலுக்கு அடியில் அடைக்கப்பட்ட குழாயில் மீண்டும் எண்ணை கசிவு ஏற்பட்டதால், ராட்சச குழாயில் இருந்து மீண்டும் கச்சா எண்ணை பீறிட்டு வெளியேறியது. பைப் லைனில் எந்தவித கசிவும் ஏற்படாது மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட்டு வழக்கம்போல் மீன்பிடிக்கச் செல்லலாம் என மாவட்ட நிர்வாகமும் சிபிசிஎல் எண்ணெய் நிர்வாகமும் கூறி இருந்த நிலையில் மீண்டும் கடலுக்கு அடியில் போட்ட பைப் லைனில் கசிவை கண்ட நாகூர் பட்டினச்சேரி மீனவர்கள், சிபிசிஎல் நிர்வாகம் மீது அதிருப்தியடைந்துள்ளனர்.