Skip to content
Home » அரியலூரில் புது பஸ் ஸ்டாண்ட்…அமைச்சர் சிவசங்கர் அடிக்கல் நாட்டினார்…

அரியலூரில் புது பஸ் ஸ்டாண்ட்…அமைச்சர் சிவசங்கர் அடிக்கல் நாட்டினார்…

அரியலூர் நகராட்சி அண்ணா சிலை அருகில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் புதிதாக கட்டப்படவுள்ள புதிய பேருந்து நிலைய கட்டடக் கட்டுமானப் பணிகளுக்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் இன்று அடிக்கல் நாட்டினார்.

இந்நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா முன்னிலையில் நடைபெற்றது.

அரியலூர் பேருந்து நிலையம் நகரின் மையப் பகுதியில் 1975 ஆம் ஆண்டு 3.04 ஏக்கர் பரப்பளவில் பி-கிரேட் தகுதி வாய்ந்த பேருந்து நிலையமாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பேருந்து நிலையம் 1975 ஆம் ஆண்டு கட்டப்பட்டு, கூடுதல் கட்டிடங்கள் 1988 மற்றும் 1995 ஆம் ஆண்டு கட்டிடம் கட்டப்பட்டது.

மேலும் இப்பேருந்து நிலையம் கட்டப்பட்டு சுமார் 42 வருடங்களுக்கு மேல் ஆனதாலும், தினந்தோறும் இப்பேருந்து நிலையத்திற்கு அதிக அளவில் உள்ளூர் மற்றும் வெளியூர் கிராம மக்கள் வந்து செல்வதாலும், மழைக்காலங்களில் பொதுமக்கள் நிற்கும் கட்டிடம் பழுதடைந்த நிலையிலும், பயன்படுத்த இயலாத நிலையிலும் இருப்பதாலும் பொதுமக்களின் நலன் கருதி மேற்கண்ட பேருந்து நிலையத்தினை இடித்து விட்டு புதிதாக கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதன்படி தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவுக்கிணங்க அரியலூரில் புதிய பேருந்து நிலையம் கட்டப்படும் என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.

அதனடிப்படையில் இன்றைய தினம் அரியலூர் நகராட்சி அண்ணா சிலை அருகில் புதிய பேருந்து நிலையக் கட்டடக் கட்டுமானப் பணிகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அடிக்கல் நாட்டில் பணிகளை துவக்கி வைத்தார்.

இந்த புதிய பேருந்து நிலையம் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதி 2022-23 திட்டத்தின் கீழ் ரூ.7.80 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நவீன வசதிகளுடன் எழிலுற கட்டப்பட உள்ளது.

இந்த புதிய பேருந்து நிலையம் கட்டுமானப் பணிகளை முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும்

பொழுது பொது மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளுடன் அமையப்பெறுவதுடன், அனைத்து பேருந்துகளும் நெருக்கடி இன்றி வந்து செல்லும் வகையிலும், போதிய இட வசதியுடனும், பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளுடன் கட்டுமான பணிகளை மேற்கொள்ள அலுவலர்களை அறிவுறுத்தி இப்புதியப் பேருந்து நிலையக் கட்டடக் கட்டுமானப் பணிகளை தரமாகவும் விரைவாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில், நகராட்சித்தலைவர் சாந்தி கலைவாணன், துணைத்தலைவர் கலியமூர்த்தி, நகராட்சி ஆணையர் (பொ) தமயந்தி, வட்டாட்சியர் கண்ணன், நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!