நாகூர் அருகே கடலுக்கு அடியில் போடப்பட்டுள்ள சிபிசிஎல்லின் கச்சா எண்ணெய் குழாய் உடைப்பு ஏற்பட்டதன் காரணமாக நாகை முதல் நாகூர் வரை உள்ள கடலோர கிராம மீனவர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். நாகூரில் உடைந்த குழாயை சரி செய்யும் பணியில் கடந்த இரு தினங்களாக சிபிசிஎல் பாதுகாப்பு அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் இதனிடையே எண்ணை குழாயை அகற்றக்கோரி, வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பட்டினச்சேரி கிராம மீனவர்களை இன்று முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயபால் சட்டமன்ற
உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் உள்ளிட்டோர் சந்தித்தனர். நாகூர் கடற்கரையில் நடைபெற்ற இந்த சந்திப்பு கூட்டத்தில் மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து அவர்கள் கேட்டறிந்தனர். மேலும் கடலுக்கு அடியில் உள்ள கச்சா எண்ணெய் குழாயை அகற்றுவது குறித்து அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும் எனவும் மீனவர்களிடம் அவர்கள் கூறினர். இதனிடையே சேதமடைந்த கச்சா எண்ணெய் குழாயை சரி செய்வதற்காக சிபிசிஎல் அலுவலர்கள் மற்றும் தொழிலாளர்கள் கடலை மண் கொட்டி அடைத்து பழுது நீக்கும் பணியை தீவிரமாக செய்து வருகின்றனர்.