தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக சமூக வலைத்தளத்தில் பரவும் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் சி.வி.கணேசன் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். வடமாநில தொழிலாளர்கள் குறித்து சமூக ஊடகங்களில் வதந்தி பரப்புபவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது…. * வெளிமாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக வதந்தி பரப்புபவர்கள், இந்திய நாட்டிற்கு எதிரானவர்கள். நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளைவிப்பவர்கள். சமூக ஊடகங்களில் இப்படி கீழ்த்தரமாக சிலர் அரசியல் செய்வது கடும் கண்டனத்திற்குரியது. * வேண்டுமென்றே வதந்தி பரப்பி, அச்சத்தையும் பீதியையும் பரப்புபவர்கள் மீது சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். * வேறு மாநிலங்களில் நடைபெற்ற சம்பவங்களின் வீடியோக்களை தமிழ்நாட்டில் நடைபெற்றதாக வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். * வடமாநிலத் தொழிலாளர்கள் எவ்வித அச்சமுமும் அடைய வேண்டாம். காவல் துறையின் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.