Skip to content
Home » அதிமுகவை அழிவு பாதைக்கு அழைத்து சென்ற நம்பிக்கை துரோகி…. ஓபிஎஸ் கடும் கோபம்…

அதிமுகவை அழிவு பாதைக்கு அழைத்து சென்ற நம்பிக்கை துரோகி…. ஓபிஎஸ் கடும் கோபம்…

  • by Senthil

ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அமோக வெற்றி பெற்றார். அவர் அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசை விட 66 ஆயிரத்து 233 வாக்குகள் கூடுதலாக பெற்றார். இந்தநிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததற்கு ஈபிஎஸ் தான் காரணம் என முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தலில் கழகம் படுதோல்வியை சந்தித்து உள்ளது. இதனை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு, அனைவரையும் ஒருங்கிணைத்து கழகத்தை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்ல உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டு இருக்கிறது. விரைவில் அவை தொடங்கப்படும்! வரலாற்றில், ஓர் இடைத் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கிட்டத்தட்ட 67,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருப்பது இந்த இடைத் தேர்தல் தான். இதற்குக் காரணம், துரோகியும், துரோகியின் தலைமையிலான ஓர் சர்வாதிகாரக் கூட்டமும் தான்.

மாண்புமிகு புரட்சித் தலைவர் கண்டெடுத்த வெற்றிச் சின்னமாம் ‘இரட்டை இலை’ சின்னம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே உச்ச நீதிமன்ற அறிவுரையை நாம் ஏற்றுக் கொண்ட நிலையில்; உச்ச நீதிமன்ற அறிவுரையை முற்றிலும் புறக்கணித்து தன்னிச்சையாக ஒரே ஒரு வேட்பாளரை மட்டும் அறிவித்து, அந்த வேட்பாளரின் பெயரை இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியபோது அதனை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அதிகமான வாய்ப்புகள் இருந்தும், ‘இரட்டை இலை’ சின்னம் பெறப்பட வேண்டும் என்ற நோக்கத்திற்காக அமைதி காத்த நிலையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் படுதோல்வி அடைந்து இருக்கிறது என்றால், அதற்கு முழு முதற் காரணம் திரு. எடப்பாடி கே. பழனிசாமி என்கிற நம்பிக்கைத் துரோகியை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதுதான். ‘தான்’ என்ற அகம்பாவத்தில், ஆணவத்தில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்காக உழைத்தவர்களை, தியாகம் செய்தவர்களை, மாண்புமிகு அம்மா அவர்களால் அடையாளம் காட்டப்பட்டவர்களை எல்லாம் கட்சியிலிருந்து வெளியேற்றி, ஒரு துதிபாடும் கூட்டத்தை தன் பக்கத்தில் வைத்துக் கொண்டு மனம்போன போக்கில் செயல்பட்டு வருகின்ற காரணத்தால்தான் தற்போதைய ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தேர்தலில் கழகம் படுதோல்வியை சந்தித்து உள்ளது. ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தல் படுதோல்வியை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு, இனி வருங்காலங்களில் அனைவரையும் ஒருங்கிணைத்து கழகத்தை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டு இருக்கிறது.

நீதியும், நேர்மையும் தவறாமல், நடுநிலையோடு சிந்தித்து, தர்மத்தின் பக்கம். நிற்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் தொண்டர்கள், புரட்சித் தலைவி அம்மாவின் தொண்டர்கள் களத்தில் இறங்கி, தங்கள் நியாயத்தை உணர்த்த வேண்டிய தருணம் இது. எப்போதும் இல்லாத வகையில் தொடர் தோல்விகளால் எதிர்காலம் எப்படி இருக்குமோ என்ற கவலையில் ஆழ்ந்திருக்கிற தொண்டர்களை உற்சாகப்படுத்தி, ஊக்கப்படுத்தி, நடுநிலைமையோடு எல்லோரையும் அரவணைத்து கழகத்தை மூத்தத் தலைவர்கள் முன்னின்று நடத்துவதுதான் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கும், புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கும் நாம் செய்கிற நன்றிக் கடன் ஆகும். கழகத் தொண்டர்களின் ஆதரவோடு, பொதுமக்களின் நம்பிக்கையைப் பெற்று, ஜனநாயக வழியில், கட்சியின் அடிப்படை சட்ட திட்ட விதிகளைக் காப்பாற்றி, அனைவரையும் ஒருங்கிணைத்து, மாண்புமிகு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா ஆகியோரின் வழியில் கட்சியை வழி நடத்திச் செல்லவும், வருகின்ற மக்களவைத் தேர்தலில் நாற்பது இடங்களிலும் கழகம் வெற்றி பெறவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் இனி வருங்காலங்களில் விரைந்து எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!