முதல்வர் முக ஸ்டாலினின் 70 வது பிறந்தநாளை மிக விமரிசையாக கொண்டாடி வரும் அமைச்சர் சேகர்பாபு 70 ஜோடிகளுக்கு ,இலவச திருமணம் நடத்தி வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற இந்த திருமணத்தை முதலமைச்சர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் தலைமை தாங்கி இன்று நடத்தி வைத்தார். மணமக்களை வாழ்த்தி மாங்கல்யத்தை தனது கையால் எடுத்துக் கொடுத்தார் துர்கா ஸ்டாலின்.
கட்டில், பீரோ, பண்ட பாத்திரம், என சகல விதமான சீர் வரிசைப் பொருட்களும் எந்த குறையும் இல்லாமல் 70 ஜோடிகளுக்கும் வழங்கப்பட்டன. இந்த திருமண விழாவில் 70 மணமக்களின் உறவினர்களும் கலந்துகொண்டனர். இதேபோல் திருமண விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு அறுசுவை காலை உணவும் அமைச்சர் சேகர்பாபு
ஏற்பாட்டில் வழங்கப்பட்டது. இந்த விழாவில் பேசிய அமைச்சர் சேகர்பாபு, துர்கா ஸ்டாலினை அண்ணியார் என்று அழைத்து புகழ்ந்து பேசினார்.
முகூர்த்த நேரம் முடிவதற்குள் நல்ல காரியம் நடக்க வேண்டும் என்பதற்காக தனது உரையை முடித்துக் கொள்வதாக கூறி தனது செண்டிமெண்டையும் அமைச்சர் சேகர்பாபு வெளிப்படுத்தினார். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அமைச்சர் மா.சுப்ரமணியன் சேகர்பாபுவை புகழ்ந்து பேசினார்.
தனது தங்கை மறைவை தொடர்ந்து திருமண விழா உள்ளிட்ட எந்த நிகழ்ச்சிக்கும் கடந்த 15 நாட்களாக செல்லாமல் சோகத்தில் இருந்த துர்கா ஸ்டாலின், முதல்வர் பிறந்தநாளை ஒட்டி நடத்திவைக்கப்படும் திருமணம் என்பதால் இதில் பழைய உற்சாகத்துடன் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.