உலக சினிமாவின் மகுடமாக இருப்பது ஆஸ்கர் விருதுகள். சினிமாவில் சாதனை புரிந்தவர்களுக்கு ஆண்டுதோறும் இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 95வது அகாடமி விருதுகள் வழங்கும் விழா வரும் மார்ச் 13-ஆம் தேதி அதிகாலை லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டோலி தியேட்டரில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.
இந்த விழாவில் உலக சினிமாவை சேர்ந்த நடிகர், நடிகைகள் மற்றும் பல தொழில்நுட்ப கலைஞர்கள் ஏராளமானோர் கலந்துக்கொள்ளவுள்ளனர். இந்நிலையில் ஆஸ்கர் விருது விழாவை தொகுத்து வழங்குபவர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் டுவைன் ஜான்சன், மைக்கேல் பி.ஜோர்டான், தீபிகா படுகோனே, ரிஸ் அகமது ஆகியோர் பெயர்கள் இடம்பெற்றுள்ளது.
இந்த தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தீபிகா படுகோனே உறுதிப்படுத்தியுள்ளார். முன்னணி நடிகையான தீபிகா படுகோனே ஆஸ்கர் நிகழ்வை தொகுத்து வழங்குவது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே கடந்த ஆண்டு நடைபெற்ற கேன்ஸ் விழாவில் தீபிகா படுகோனே நடுவராக பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது