திருச்சி மாவட்டத்தின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக திருச்சி காவிரி பாலம் திகழ்கிறது. திருச்சி – ஸ்ரீரங்கத்தை இணைக்கும் வகையில் கட்டப்பட்ட இந்தப் பாலம் கடந்த 1976-ம் ஆண்டு கட்டப்பட்டது. திருச்சி காவிரி பாலத்தில் ஆங்காங்கே ஏற்பட்டுள்ள விரிசல்கள் பலமுறை சீர் செய்யப்பட்ட போதிலும், தொடர்ந்து பாலத்தில் விரிசல்கள் ஏற்பட்டது.
எனவே காவிரி பாலத்தை சீரமைக்க ரூ.6 கோடியே 87 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 10-ந் தேதி முதல் பாலம் மூடப்பட்டது. எனினும் காவிரி பாலத்தில் 2 மீட்டர் இடைவெளி விட்டு இரு சக்கர வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் செல்ல அனுமதிக்கப்பட்டு வந்தனர். இதில் கார் மற்றும் கனரக வாகனங்கள் அனைத்தும் பைபாஸ் வழியாக ஸ்ரீரங்கம் பகுதிகளுக்கு திருப்பி விடப்பட்டது.
காவிரி பாலத்தில் 5 மாதங்கள் பராமரிப்பு, சீரமைப்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது. இதனால் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து காவேரி பாலம் சீரமைக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும் 3ம் தேதிக்குள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், திருச்சி காவிரி பாலம் நாளை (சனிக்கிழமை) திறக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. பராமரிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் காவிரி பாலம் மக்கள் பயன்பாட்டிற்காக நாளை திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.