கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பெயரில் மாநகர் முழுவதும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவை மாநகரில் கஞ்சா விற்பனை செய்து வரும் பலரை காவல்துறையினர் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். அதன்படி சில தினங்களுக்கு முன் சங்கனூர் பகுதியை சேர்ந்த சூரியபிரகாஷ் என்பவரை கோவை மாநகர காவல் துறையினர் கைது செய்தனர். அவரிடம் இருந்து 450 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு அவரிடம்
விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் ரத்தினபுரி பகுதியை சேர்ந்த பிரபல ரவுடியான கௌதம் என்பவர் தலைமறைவாக இருந்து கொண்டு அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் மூலம் கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து கௌதமின் மனைவியான மோனிஷாவின் இல்லத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டதில், கார் ஒன்றில் சுமார் 1500 கிராம் கஞ்சாவும் 4000 ரூபாய் பணமும் இருந்தது தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து வீட்டில் உள்ளே சென்று சோதனை மேற்கொண்ட போது கஞ்சா விற்ற பணத்தில் தங்க நகைகள் வாங்கி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தது தெரியவந்தது. இதனை அடுத்து மோனிஷா மற்றும் அவருக்கு உதவியாக இருந்த அவரது சகோதரி தேவி ஸ்ரீ மற்றும் அவரது தாயார் பத்மா ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இவர்களிடமிருந்து கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய கார், இருசக்கர வாகனம், எடை போடும் இயந்திரம், கஞ்சா விற்ற பணத்தில் வாங்கிய சுமார் பத்து சவரன் தங்க நகைகள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளது.
கோவை மாநகர துணை ஆணையர் சந்தீஷ் தலைமையில் சாய்பாபா காலனி சரக உதவி ஆணையர் பஷீனா மேற்பார்வையில் இரத்தினபுரி காவல் நிலைய ஆய்வாளர் மீனாகுமாரி சட்டம் ஒழுங்கு உதவி ஆய்வாளர் ஜெகதீசன் உள்ளிட்ட குழுவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.