திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது 70-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவரின் பிறந்தநாளுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பிரபலங்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இன்று காலை முதல் #HBDMKStalin70 என்கிற ஹேஷ்டேக், இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீண்ட ஆயுளுடனும், ஆரோக்கியத்துடனும் வாழ வாழ்த்துகிறேன். எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்!” என்று குறிப்பிட்டுள்ளார். இதேபோல் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, துணை குடியரசு தலைவர், தெலங்கானா, கேரளா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த முதலவர்களும் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த தினமான இன்று அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தங்கம் மோதிரம் அணிவித்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி சென்னை சேப்பாக்கம் அரசு கஸ்தூரிபாய் காந்தி மருத்துவமனையில், இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரிசளித்தார்.