தஞ்சாவூர், – ஆஸ்திரேலியாவில், போலீசாரால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட இளைஞர், தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் என தெரியவந்ததுள்ளது.
ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி ஆபர்ன் ரயில்வே ஸ்டேஷனில், துாய்மை பணியாளரை ஒருவர் கத்தியால் தாக்கியுள்ளார். இதனால், துாய்மை பணியாளர் ரத்தக்காயமடைந்த நிலையில், அக்கம் பக்கத்தினர் மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மேலும், அந்த இளைஞர் கத்தியுடன் போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடி சென்றார். அங்கு சென்ற இளைஞர், போலீசாரை தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து இரண்டு போலீசார் அந்த இளைஞரை நோக்கி 3 முறை துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
இதில், நெஞ்சில் இரண்டு குண்டுகள் பாய்ந்த நிலையில், மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற போது, அந்த இளைஞர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில், சுட்டுக்கொல்லப்பட்டவர் தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம், புதுமனை தெருவை சேர்ந்த சையது அகமது மகன் முகமது ரஹமத்துல்லா,32, என்பதும், பிரிட்ஜிங் விசாவில், கடந்த 2019ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில், உணவகத்தில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், முகமது ரஹமத்துல்லாவால் தாக்கப்பட்டு காயமடைந்த துாய்மை பணியாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அதிராம்பட்டினம் போலீசார், விசாரணை நடத்தி வரும் சூழலில், இறந்த ரஹமத்துல்லாவிற்கு, தாய் ஆமினாம்மாள், அண்ணன் அப்துல்ஹனி சென்னையில் சூப்பர் மார்க்கெட் வைத்து நடத்தி வருவதும், ஒரு தங்கை இருப்பதும் தெரியவந்தது. அத்துடன், ரஹமத்துல்லா இறந்த தகவலறிந்த தாய்,தங்கை உள்ளிட்ட குடும்பத்தினர் சென்னைக்கு சென்று விட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.