சென்னை, திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது 70-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவரின் பிறந்தநாளுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடி தொலைபேசியில், முதல்வர் ஸ்டாலினை தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, தற்போதைய தலைவர் கார்கே உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
நடிகர்கள் கமல், ரஜினிகாந்த், இசையமைச்சாளர் இளையராஜா உள்ளிட்ட திரைபிரபலங்களும் முதல்-அமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “70-வது பிறந்தநாள் காணும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நீண்ட ஆயுளுடனும், நிறைந்த ஆரோக்கியத்துடனும் வாழ பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார். வாழ்த்து கடிதத்துடன், மலர்கொத்தும் அவர் அனுப்பி வைத்து உள்ளார்.
இதுபோல பாமக நிறுவனர் ராமதாஸ், பாஜக தலைவர் அண்ணாமலை, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தேமுதிக தலைவர் விஜயகாந்த், உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.