மயிலாடுதுறை மாவட்டம், திருவாலங்காடு பகுதியைச் சேர்ந்தவர் துரைசாமி. இவர் தனது குடும்பத்தினரை அழைத்து கொண்டு நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு இன்று சுற்றுலா வந்துள்ளார். சொகுசு கார் ஒன்றில் வேளாங்கண்ணி கடற்கரைக்கு வந்து இவர்கள் காரை வாகனம் நிறுத்துமிடத்தில் நிறுத்தி வைத்து விட்டு சுற்றி பார்க்க சென்றுள்ளனர்.
கோவில், கடற்கரை சுற்றுலா பகுதிகளை சுற்றிப் பார்த்துவிட்டு சுமார் 2 மணி நேரத்திற்கு பின்னர் வாகனம் நிறுத்தும் இடத்திற்கு வந்த அவர்கள் வாகனத்தை திறக்கச் சென்றுள்ளனர். அப்போது கார் பேனட்டில் இருந்து கரும்புகை வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் அதனை திறந்து பார்த்தனர் இன்ஜின் சூடாகி சாட் சர்க்யூட் ஏற்பட்ட நிலையில் திடீரென கார் என்ஜின் பகுதியில்
இருந்து தீப்பொறி கிளம்பி கார் பற்றி எரிய ஆரம்பித்துள்ளது. காரில் ஏற்பட்ட தீயானது மள மள என கார் முழுவதும் பரவி கொழுந்து விட்டு எறிய துவங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் தீயை அணைக்க போராடினார். வேளாங்கண்ணி கடற்கரையில் அருகே வாகனங்கள் நிறுத்துமிடத்தில் சுற்றுலா வந்த பயணியின் சொகுசு கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து வேளாங்கண்ணி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல தெரிவிக்கவே, விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் எரிந்து கொண்டிருந்த காரை தண்ணீர் பீச்சி அடித்து அணைத்தனர். கார் தீப்பற்றி எரிந்த விபத்தில் 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொகுசு கார் முற்றிலும் எரிந்து சேதமானது.
கார் தீ விபத்து குறித்து முதற்கட்ட விசாரணையில், சுற்றுலா வந்த பயணிகள், சொகுசு காரில் இன்ஜின் இயக்கத்தை நிறுத்தாமல் அவர்கள் அப்படியே காரை விட்டு சென்றதும், இதன் காரணமாக நீண்ட நேரம் எஞ்சினும், ஏசியும் இயங்கிக் கொண்டிருந்ததால் ஷார்ட் சர்க்யூட் ஏற்பட்டு தீ பற்றி எரிந்துள்ளதாக தெரியவந்துள்ளது.